வியாழன், 9 ஜனவரி 2025
  1. கரு‌த்து‌க் கள‌ம்
  2. எழுத்தாளர்கள்
  3. செல்வன்
Last Updated : செவ்வாய், 9 செப்டம்பர் 2014 (13:07 IST)

இது, ஜோக் இல்லை; முக்கியமான பல்கலைக்கழக ஆய்வு

உலகில் உள்ள தீமைகளைக் களையும் முயற்சியில் சளைக்காத லிபரல் பெண்ணியவாதிகள், பெண்களுக்கு எதிரான அடுத்த தீமையைக் கண்டுபிடித்துவிட்டார்கள். அது வேறு எதுவும் அல்ல, வீட்டில் சமைப்பதுதான்.
 
இதற்கு வித்திட்டது, வடகரோலினா பல்கலைக்கழக ஆய்வு ஒன்று. சோஷியாலஜி பேராசிரியர்கள் நிகழ்த்திய இந்த ஆய்வில் "நேரப் பற்றாக்குறை, பணத்தைச் சேமிக்கவேண்டும் என்ற எண்ணம், குடும்ப உறுப்பினர்களைத் திருப்திபடுத்த வேண்டும் என்ற ஆசை இதனால் எல்லாம் வீட்டுச் சமையல் பெண்களுக்கு அவசியம் அற்றதாக ஆகிவிடுவதாகக் கூறுகிறது.
 
2 மில்லியன் ஆண்டுகளாக மனித இனம் பின்பற்றி வந்த சமையல் முறை சரியில்லை எனக் கண்டுபிடித்தாகிவிட்டது. அப்புறம் சமைக்காமல் உணவுக்கு என்ன செய்வது?
 
ஆய்வில் அதற்குச் சரியான பதில் இல்லை. ஆனால் சில ஆலோசனைகள் முன்வைக்கப்படுகின்றன. ஃபுட் டிரக் (Food truck) எனப்படும் வேனில் இயங்கும் உணவகங்களில் உண்பது ஒரு தீர்வு. ஒட்டுமொத்தமாக ஊர் முழுவதற்கும் பொதுச் சமையல் செய்யும் ஆலோசனை ஒன்றும் முன்வைக்கப்படுகிறது. பள்ளிகளில் உணவு சமைத்து வீடுகளுக்குக் கொடுக்கும் ஆலோசனையும் முன்வைக்கப்படுகிறது. இம்மாதிரி கிரியேடிவ் ஆன தீர்வுகளை யோசிக்காமல் சமையல் அறைக்குப் போய் சமைப்பது, பெண்களின் சுமையை அதிகரிக்குமே ஒழிய குறைக்காது எனவும் ஆய்வு கூறுகிறது.
 
இது ஏதோ ஜோக் என நினைக்க முடியாது. இந்த ஆய்வை ஜோக்காக எடுக்காமல் சீரியசாக எடுத்து, வாஷிங்டன் போஸ்ட் மற்றும் பிபிஎஸ் ஆகிய முன்னணி நாளிதழ்கள், தொலைக்காட்சிகள் செய்தி வெளியிட்டன. அதன் தொடர்ச்சியாக இடதுசாரி பெண்ணிய இதழான ஸ்லேட்டில் (The slate) "வீட்டில் சமைக்கும் உணவைப் பாராட்ட வேண்டாம்" என்ற கட்டுரை வெளியானது.
 
அதில் உள்ள சில பாயிண்டுகள் பின்வருமாறு:
  • ஏழைத் தாய்மார்களுக்கு காய்கறி வாங்கப் பணம் இல்லை.
  • ஏழைகளுக்குச் சமையல் அறை கட்ட, வசதி இல்லை
  • ஏழைத் தாய்களிடம் கத்தி, பானைகள், கட்டிங் போர்டுகள் வாங்கக் காசு இல்லை
  • சமைப்பது நேரம் பிடிக்கும் வேலை
  • சமைப்பது செலவு பிடிக்கும் வேலை
  • என்னதான் நன்றாகச் சமைத்தாலும் நன்றிகெட்ட குடும்ப உறுப்பினர்கள் (கணவர், குழந்தைகள்) அதில் ஏதோ குறை சொல்லத்தான் செய்வார்கள். வீட்டு உணவை விடத் துரித உணவைத் தான் அவர்கள் விரும்புவார்கள். அப்புறம் இவர்களுக்கு ஏன் சமைக்க வேண்டும்? (!)
படிச்சு முடிச்சாச்சா?
 
இது ஜோக் என நினைக்கலாம். ஆனால் ஜோக் இல்லை. இடதுசாரி பெண்ணியம் என்பது எல்லாம் இப்போது இப்படிதான் அர்த்தமற்ற விஷயங்களைப் பற்றி எழுதுவதாக மாறிக்கொண்டு வருகிறது. மேலே உள்ள வாதங்கள் மிகவும் அர்த்தமற்றவை என்பதைச் சிறுகுழந்தை கூட அறியும். உலகில் தெருவோரம் வீடின்றி வசிக்கும் மக்கள் கூடச் சமைத்து உண்பதையே காண்கிறோம். 
பிள்ளைகளுக்கும் கணவனுக்கும் சமைப்பது ஒரு சவால்தான். ஆனால் குழந்தைகளுக்குச் சமைப்பதுதான் பெண் இனம் 21ஆம் நூற்றாண்டில் சந்திக்க வேண்டிய சவால் என நம் பாட்டிகளிடம் சொல்லியிருந்தால் அவர்கள் மயக்கம் போட்டு விழுந்து இருப்பார்கள். 
 
அவர்கள் சந்தித்த பிரச்சனை எல்லாம் சதி, வரதட்சிணை, உடன்கட்டை, ஸ்டவ் வெடித்தல் என வேறு தளங்களில் நிகழ்ந்தன. அத்தனை வன்முறைகளைச் சந்தித்து ஜெயித்து உயர்ந்த பெண் விடுதலை இயக்கம், இன்று இம்மாதிரி அர்த்தமற்ற தளங்களில் போராடுவதைக் காண்கையில் வருத்தப்படுவதா, மகிழ்ச்சி அடைவதா எனத் தெரியவில்லை!!
 
குடும்பத்துக்குச் சமைத்துப் போட்டுக்கொண்டிருந்தால் பெண்கள் வேலைக்குப் போவது எப்படி? சம்பாதிப்பது எப்படி? சமத்துவம் அடைவது எப்படி? முன்பு பெண்ணியவாதிகள் ஆண்களைச் சமைக்க வைக்க முயன்றார்கள். ஆண்களுக்குச் சமையலில் விருப்பம் இன்மையால் அது வெற்றி அடையவில்லை. அதனால் பின்பு வேலைக்குப் போகாமல் ஹவுஸ் ஒய்ஃபாக இருக்கும் பெண்களைத் திட்டித் தீர்த்தார்கள். இப்போது பெண்கள் வேலைக்குப் போக ஆரம்பித்த பின், சமைக்கும் பெண்களையும் சமையலையும் திட்ட ஆரம்பித்துவிட்டார்கள்.
 
ஏழைகளிடம் கத்தி வாங்கக் காசு இல்லை, பாத்திரம் வாங்கக் காசு இல்லை!
 
அதனால் யாரும் சமைக்க வேண்டாம்!
 
எத்தனை எளிமையான வாதம். ஆனால் யோசித்து பார்த்தால் வீட்டில் கணவனுக்கும் குழந்தைகளுக்கும் சமைத்துப் போடும் பெண்ணைப் பெண்ணியவாதியாக ஏற்க, சக பெண்ணியவாதிகள் முன்வருவார்களா என யோசித்தால் இதற்கான விளக்கம் நமக்குக் கிடைத்துவிடும். பெண்ணியம் என்பது புரட்சி. சமைப்பதில் என்ன புரட்சி இருக்கப் போகிறது? சமைக்காமல் இருந்தால் தானே புரட்சி நிகழும்?
 
வீட்டில் சமைக்காமல் ஒட்டுமொத்த குடும்பமும் பள்ளிகளில் தட்டேந்தியும் அரசாங்கம் உணவிடும் என நம்பியும், ஃபுட் டிரக்குகளை நம்பியும் அமர்ந்திருப்பது தான் புரட்சி, ஆணாதிக்கத்தை ஒழிக்கும் வழி.. நன்றி கெட்ட குடும்பமே, திருந்து!