1. கரு‌த்து‌க் கள‌ம்
  2. எழுத்தாளர்கள்
  3. செல்வன்
Last Modified: வியாழன், 18 செப்டம்பர் 2014 (14:13 IST)

பீல் மகாபாரதம் - மிக வித்தியாசமான திரவுபதியின் கதை

மத்தியபிரதேசத்தில் பீல் (Bheel) எனும் பழங்குடியினர் உண்டு. அவர்களை ஆய்வு செய்ய சென்ற பேராசிரியர் பகவான் தாஸ் படேல், பீல் பழங்குடியினரிடம் ஒருவகை மகாபாரதம் இருப்பதைக் கண்டார். அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் திரவுபதியின் கதை மிக வித்தியாசமானது என்பதுடன் பழங்குடி மரபுகளையும் உள்ளடக்கியது. பீல் மகாபாரதம் (Bheel Mahabharat) எனும் பெயரில் சாகித்ய அகாடமி நூலாக இது வெளிவந்தாலும் இதன் பெயர் பாரத் என்பதாகும். பீல் மொழியில் இதன் பொருள் யுத்தம் என்பதாகும்.
 
இதில் திரவுபதி பொன்னிற முடியை உடையவளாகச் சித்திரிக்கப்படுகிறாள். அஸ்தினாபுரத்தில் அவள் உறங்குகையில் அவள் தோழியர் அவள் தலையைச் சீவுகின்றனர். அப்போது ஒரு பொன்னிற முடி பறந்து சென்று காற்றில் அடித்துச் செல்லப்பட்டு, பாதாள உலகம் செல்கிறது. அதை ஆளும் அரசனான வாசுகி எனும் பாம்பு மன்னன், 12 வருட ஆழ்துயிலில் இருக்கிறான். அவனைச் சுற்றி அவனது அரசியரான பத்மநாகினிகள் இருக்கிறார்கள். திரவுபதியின் பொன்னிற முடி அவன் மேல் வீழ்கிறது. உடனே அரசன் துயில் நீங்கி எழுகிறான். இந்த வாசுகி வேறு யாரும் அல்ல, பாற்கடலைக் கடைகையில் கயிறாகப் பயன்படுத்தபட்ட வாசுகி எனும் 12 தலை நாகம் தான் அது
 
முடியைக் கண்டு காதல் வசப்பட்டுப் பூமிக்குக் கிளம்புகிறான். அரசியர் அவனைத் தடுக்கிறார்கள். அவன் அடுத்து விழித்திருக்கும் 12 வருடமும் அவனுக்கு வேண்டிய இன்பத்தைக் கொடுப்பதாக அவர்கள் கூறியும் அதை மறுத்து, திரவுபதியைத் தேடிச் செல்கிறான் வாசுகி. அஸ்தினாபுரத்தை அடைந்து உப்பரிகை மேலேறி, திரவுபதியைச் சந்திக்கிறான். அவனைக் கண்டு அதிர்ச்சி அடையும் திரவுபதி, அங்கிருந்து அகலுமாறும் தன் கணவன்மார்கள் வந்தால் அவன் கதி அதோகதியென்றும் எச்சரிக்கிறாள்.
 
ஆனால் அதைக் கேட்டு துளியும் அஞ்சாத வாசுகி, திரவுபதியை வெந்நீரைக் காய்ச்சி தன்னைக் குளிப்பாட்டுமாறு பணிக்கிறான். அவளும் அப்படிச் செய்கையில், அர்ச்சுனன் உள்ளே வருகிறான். அதன்பின் அருச்சுனனுக்கும் வாசுகிக்கும் போர் நடக்கிறது. மிகப் பெரும் போருக்குப் பின் அருச்சுனனை வாசுகி தோற்கடித்து, கீழே தள்ளி தன் மீசையில் இருக்கும் ஒரு முடியைப் பிடுங்கி, அருச்சுனனைக் கட்டிலுக்கு மேலே கட்டிப் போடுகிறான். அதன்பின் 32 வகை உணவுகளைச் சமைத்துப் பரிமாறும்படி திரவுபதிக்குக் கட்டளை இடுகிறான். திரவுபதி அப்படி செய்ததும் அதன்பின் அவளை அருச்சுனன் கண்முன் பலாத்காரம் செய்துவிட்டு, பாதாள உலகம் செல்கிறான்.

 
காலையில் கண்விழிக்கும் திரவுபதி, அருச்சுனனை விடுவிக்கிறாள். அவமானம் கருதி இருவரும் இதை யாரிடமும் சொல்வதில்லை. அடுத்த நாள் இரவும் வாசுகி வருகிறான். அருச்சுனனைக் கட்டிப் போட்டுவிட்டு, சமையல், குளியல், பலாத்காரம் அனைத்தும் நடக்கிறது. இது தினமும் தொடர்ந்து நடப்பதால், அருச்சுனன், திரவுபதியிடம் வாசுகியை எப்படி கொல்வது என்பதைக் கேட்குமாறு ஆலோசனை கூறுகிறான்.
 
திரவுபதியும் வாசுகியிடம் "உன்னை எப்படி கொல்ல முடியும்?" என நைச்சியமாகக் கேட்க, அவன் "என்னைக் கொல்லக்கூடிய ஒரே வீரன் கர்ணன் மட்டுமே" என்கிறான். அடுத்த நாள் காலையில் அருச்சுனன், பூங்காவில் சென்று உட்கார்ந்துகொள்கிறான். அங்கே வரும் கர்ணனுக்குக் காலால் வணக்கம் வைக்கிறான். கொதிப்படையும் கர்ணனிடம் "நீ அனாதைக் குழந்தை தானே? உனக்கு காலால் தான் வணக்கம் வைப்பேன்" என்கிறான்.
 
ஆவேசமடைந்த கர்ணன், தன் வளர்ப்புத் தாயான தேரோட்டி ராதேயன் மனைவி மானச மாலினியிடன் சென்று தன் தாய் யார் எனக் கேட்கிறான். அவள் குந்தியைக் கைகாட்ட, குந்தியிடம் சென்று கேட்டதும் அவள் உண்மையை ஒத்துக்கொள்கிறாள். பீல் பாரதத்தில் குந்தியின் கன்னித் தன்மை கெடாமலிருக்க, கர்ணன் குந்தியின் தலைவழியே பிறந்ததாகக் கூறப்படுகிறது. அதன்பின் தந்தையைத் தேடி சூரியனிடம் செல்கிறான் கர்ணன். அங்கே அருச்சுனனைக் கொல்ல, அக்னி கட்டாரி ஒன்றை வாங்கி வருகிறான்.
 
அருச்சுனனைத் தேடிச் செல்கையில் அவனைத் திரவுபதி சந்தித்து, வாசுகி செய்யும் காரியத்தைச் சொல்லி அழவும், தன் சகோதரர்கள் மனைவிக்கு நேரும் அவமானத்தைப் போக்கக் கர்ணன் முடிவெடுக்கிறான். வாசுகி அன்று இரவு குதிரையில் வந்து இறங்கியதும் அக்னி கட்டாரி கொண்டு அவனது 12 தலைகளில் 11 தலைகளைப் பொசுக்குகிறான். 12ஆவது தலையைப் பொசுக்க முனைகையில் வாசுகி மன்னிப்பு கேட்டு, இனிமேல் பூலோகம் வர மாட்டேன் என்றும் பாதாள உலகில் மட்டுமே இருப்பதாகவும் வாக்கு கொடுக்க, அதன்பின் கர்ணன் அவனைத் தப்ப விடுகிறான்.
 
இப்படிச் செல்லும் கதையில் வாசுகியும் கர்ணனும் மிக உயர்வாகப் புகழப்படுகிறார்கள். வாசுகிப் பாம்பு தான், பீல் மக்களின் பழங்குடி தெய்வம். அத்தெய்வத்தின் சிறப்பைக் கூறவே இத்தகைய அருச்சுனனையும் தோற்கடிக்கும் வீரம் இருந்ததாகவும், திரவுபதியுடன் அவன் சேர்ந்ததாகவும் ஒரு கதை புனையப்பட்டதாகக் கூறுகிறார் பேராசிரியர் படேல்.