தந்தையரைப் போற்ற ஒரு நாள்!

ச.ர.ராஜசேக‌ர்

Webdunia|
தந்தை பெரியார், நெல்சன் மண்டேலா போன்றோர், 'தந்தை' என்ற சொல்லுக்கு மேலும் சிறப்பு ஏற்படுத்தியுள்ளனர் என்றே கூற வேண்டும்.

சுமார் 25 ஆண்டுகளுக்கு முந்தைய கட்டத்தில் குழந்தைகள் பாடும் பாடல்களை, அவர்களுடையை பேச்சை அவர்கள் தந்தைகள் மிகவும் ரசித்தனர். இன்றைக்கு அதே குழந்தைகள் இளைஞர்களாகவும், தந்தைகளாகவும் மாறிவிட்டனர். அவர்களுக்கும் குழந்தைகள் பிறந்துவிட்டன.

ஆனால் இன்றைய நவீன உலகில் செல்போன், லேப்-டாப் கணினி, ஐ-பாட் கருவிகளும் தான் பல தந்தைகளுக்கு கைக்குழந்தைகளாக மாறி விட்டன. தந்தையின் பணிச்சுமை காரணமாகவும், குழந்தைகளின் பாடச்சுமை காரணமாகவும் தந்தை -மகன்/மகள் இடையிலான பாசப் பிணைப்பு வெகுவாக குறைந்து வருகிறது.
பல வீடுகளில் அக்குடும்பத்தின் வாரிசுகள் பள்ளிக்குச் செல்லும் போது, கால்சென்டர் அல்லது சாஃப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரியும் அவரது தந்தை ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பார்... அதே தந்தை நள்ளிரவு அல்லது அதிகாலை பணி முடிந்து வீடு திரும்பும் போது அவரின் குழந்தைகள் நித்திரையில் இருக்கும்.

நாளடைவில் தந்தை-மகன் இடையிலான பாசக்கயிறு மிக மெலிதாகி விடும். இதன் காரணமாகவே இன்று முதியோர் இல்லங்கள் அதிகரிக்கின்றன என்றும் ஒரு சில மனநல மருத்துவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
எனவே, தந்தையர் தினத்தை கொண்டாடும் இந்நாளில், அனைத்து தந்தையரும் தங்கள் குழந்தைகளுக்கு செய்ய வேண்டிய கடமைகளை, அளிக்கப்பட வேண்டிய பாசத்தை மனதார உணர வேண்டும். வேலைப்பளு இருந்தாலும் குழந்தைகளுக்காக ஒவ்வொரு நாளும் சிறிது நேரத்தை ஒதுக்க வேண்டியது அவசியம்.

உதாரணமாக, குழந்தை மாலையில் பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்ததும், அலுவலத்தில் உள்ள தந்தை, போன் மூலம் தொடர்பு கொண்டு பள்ளியில் நடந்த சுவையான நிகழ்வுகளை கே‌ட்டு‌ததெ‌ரி‌ந்தகொள்ளலாம். அவர்கள் கல்லூரி செல்லும் மாணவர்களாக இருந்தால், மாலை நேரத்தில் கல்லூரி முடிந்தவுடன் தங்கள் அலுவலகம் அருகே உள்ள ஏதாவது ஒரு உணவு விடுதிக்கு அழைத்து ஒன்றாக தேனீர் பருகலாம். இதுபோன்ற செயல்கள் மூலம் தந்தை மீதான பாசம் கலந்த மரியாதை வாரிசுகளுக்கு நிச்சயம் அதிகரிக்கும்.
மேற்கண்டவற்றை இன்றைய தந்தைகளுக்கு கூறப்படும் யோசனையாக கருத வேண்டாம், நாளைய தந்தைகளாக உருவெடுக்க இருக்கும் இன்றைய இளைஞர்களும் எதிர்காலத்தில் இவற்றைப் பயன்படுத்தினால், பல நூற்றாண்டுகள் கடந்தாலும் தந்தையர் தினக் கொண்டாட்டம் கோலாகலமாக தொடரும்.


இதில் மேலும் படிக்கவும் :