வெள்ளி, 14 மார்ச் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 16 பிப்ரவரி 2025 (10:01 IST)

காலாவதியான உங்கள் கல்விக் கொள்கையை..?? - முதல்வருக்கு அண்ணாமலை பதில்!

Annamalai Stalin

மும்மொழி கொள்கையை தமிழ்நாட்டில் மத்திய அரசு திணிக்க முயல்வதாக கண்டனம் தெரிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் இட்ட பதிவிற்கு பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை அளித்துள்ள பதில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

அரசியல் காரணங்களுக்காக தமிழக அரசு மத்திய கல்வி திட்டங்களை ஏற்பதில்லை என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து மத்திய அரசை கண்டித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் “எங்கள் உரிமையைத்தான் கேட்கிறோம்! உங்கள் தனிச்சொத்தைக் கேட்பதுபோல் திமிராகப் பேசினால், தமிழர்களின் தனிக்குணத்தையும் டெல்லி பார்க்க வேண்டியிருக்கும்” என கூறியிருந்தார். இதனால் மத்திய, தமிழக அரசு இடையேயான கல்விக் கொள்கை பிரச்சினை மேலும் பரபரப்பை எட்டியுள்ளது.

 

இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலினின் எக்ஸ் தள பதிவிற்கு பதிலளித்து பதிவிட்டுள்ள பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை ”முதலமைச்சர் உள்ளிட்ட தமிழக அமைச்சர்களின் மகன், மகள் அல்லது பேரன் பேத்திகள் படிக்கும் தனியார் பள்ளிகளில், மும்மொழிகள் பயிற்றுவிக்கலாம். எங்கள் வீட்டுக் குழந்தைகள் பயிலும் அரசுப் பள்ளிகளில், தமிழ், ஆங்கிலம் மற்றும் மூன்றாவது ஒரு இந்திய மொழி என மும்மொழிகள் கற்பிக்கக் கூடாதா?

 

தமிழகம் முழுவதும் திமுகவினர் நடத்தும் தனியார் பள்ளிகளில், பெரும்பாலும் சிபிஎஸ்இ மும்மொழி பாடத்திட்டமே இருக்கிறது. அரசுப் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு மட்டும் ஏன் ஓரவஞ்சனை? பணம் இருந்தால் மட்டும்தான் பல மொழிகள் கற்க வேண்டும் என்று கூறுகிறாரா முதலமைச்சர்? 

 

தற்போது 2025 ஆம் ஆண்டு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. உலகம் வேகமாக வளர்ச்சியடைந்து கொண்டிருக்கிறது. இன்னும், உங்கள் 1960களின் காலாவதியான கொள்கையை, தமிழகக் குழந்தைகள் மீது திணிப்பது என்ன நியாயம்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

 

தொடர்ந்து மும்மொழிக் கொள்கை, கல்வி நிதி பங்கீடு விவகாரத்தில் ஏற்பட்டு வரும் இந்த வாக்குவாதங்கள் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

 

Edit by Prasanth.K