Last Modified: திங்கள், 19 டிசம்பர் 2016 (17:10 IST)
வாகன சோதனையின் போது வாலிபர் பலி - போலீசாரை தாக்கிய பொதுமக்கள் (வீடியோ)
சேலம் மாவட்டத்தில் போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது, அதற்கு பயந்து மோட்டார் சைக்கிளை திருப்பிய வாலிபர் ஒருவர் வேனில் அடிபட்டு இறந்ததால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் போலீசாரை அடித்து உதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் சங்ககிரி வட்டம் கோனேரிபட்டியை சேர்ந்தவர் சரவணன்(24). இவர் ஒரு விசைத்தறி நெசவுத் தொழிலாளி ஆவார். இவர் நேற்று மாலை 6 மணியளவில் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, சின்னப்பம்பட்டி செல்லும் வழியில் உள்ள ஒரு இடத்தில் மகுடஞ்சாவடி காவல்நிலைய போக்குவரத்து போலீசார் சிலர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அவர்கள் சரவணனிடம் வண்டியை நிறுத்துமாறு கூறியுள்ளனர். ஆனால், அதற்கு பயந்த சரவணன் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல், அப்படியே திருப்பி வந்த வழியே செல்ல முயற்சி செய்துள்ளார். அப்போது அவருக்கு பின்னால் வந்த வேன் அவர் மீது வேகமாக மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட சரவணன் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார். இந்த தகவல் அறிந்து அங்கு கூடிய பொதுமக்கள், ஆத்திரமடைந்து போலீசாரை தாக்கினர். இதில் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட சில அதிகாரிகள் படுகாயம அடைந்தனர். அதன் பின் அவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
அதேபோல், போலீசாரின் இரு சக்கர வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. இதனால் அங்கு பதட்டம் அதிகமாயிற்று. எனவே 100க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். அவர்கள் கண்ணீர் புகை குண்டு வீசியும், தடியடி நடத்தியும் பொதுமக்களை கலைத்தனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.