1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வியாழன், 31 மார்ச் 2016 (13:04 IST)

அதிமுகவிற்கு அளித்திருக்கும் ‘ஷாக்’ இத்தோடு நின்றுவிடாது - தமிழிசை சவுந்தரராஜன்

இப்போது மத்திய மின்துறை மந்திரி சொன்ன குற்றச்சாட்டுகளால், அதிமுகவிற்கு ‘ஷாக்’ அடித்துக்கொண்டு இருக்கிறது. இந்த ‘ஷாக்’ இதோடு நின்று விடாது என்று பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
 

 
கடந்த 26-03-2016 அன்று மத்திய மின்துறை அமைச்சர் பியூஷ் கோயல் டெல்லியில் பேசியபோது, தமிழக மின் திட்டங்கள் குறித்து தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை தன்னால் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும், மின்துறை அமைச்சரிடம் ஒரு முறை பேசிய போது, “அம்மாவிடம் கூறுகிறேன்” என்று சொன்னதாகவும், ஆனால் அதன் பின் பல மாதங்கள் ஆகியும் தமிழக அரசிடமிருந்து பதிலே வரவில்லை என்றும் பேசியிருந்தார்.
 
அதே அமைச்சர், ஏற்கனவே, 03-03-2016 அன்று தமிழக மின் உற்பத்தியை மேம்படுத்துவது குறித்து பேச்சு நடத்த முதல் அமைச்சர் ஜெயலலிதா முன் வரவில்லை என்ற கருத்தையும், தமிழக மின் துறை அமைச்சரும் ஆலோசனை நடத்த முன் வரவில்லை என்ற கருத்தையும் தெரிவித்திருந்தார்.
 
இந்நிலையில் இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சவுந்தரராஜன், ”தமிழகத்தில் மின் திட்டங்கள் சரியாக செயல்படுத்த முடியாமல் போனதற்கு மத்திய அரசுதான் காரணம் என்று மின்சாரத்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் குற்றம் சாட்டி உள்ளார்.
 
இவர் கடந்த 5 ஆண்டுகளாக எங்கு இருந்தார் என்றே தெரியவில்லை. இப்போது தான் விழித்து இருக்கிறார். அமைச்சர் என்ற ஞாபகம் வந்து இருக்கிறது. ஆட்சி முடியும் இந்த நேரத்தில், மின் உற்பத்தி குறித்து நத்தம் விஸ்வநாதன் பேச எந்த உரிமையும் இல்லை.
 
தமிழகத்தில் மின்வெட்டு உள்ளது என்ற குற்றம் சொன்னால், மின்வயரை தொட்டு பாருங்கள் ‘ஷாக்’ அடிக்கும் என்று நத்தம் விஸ்வநாதன் கிண்டலாக சொன்னார்.
 
ஆனால் இப்போது மத்திய மின்துறை மந்திரி சொன்ன குற்றச்சாட்டுகளால், அதிமுகவிற்கு ‘ஷாக்’ அடித்துக்கொண்டு இருக்கிறது. இந்த ‘ஷாக்’ இதோடு நின்று விடாது. தேர்தல் முடிவுகளும் அதிமுகவிற்கு அதிர்ச்சியாக தான் இருக்கும்” என்று கூறியுள்ளார்.