ஜெயலலிதாவுக்காக அமைச்சர் நடத்திய யாகத்தில் பெண் மரணம்
சிவகாசி அருகே உள்ளதிருத்தங்கல் நின்ற நாராயண பெருமாள் கோவிலில் முதலமைச்சர் நலம் பெற வேண்டி நடைபெற்ற யாகத்தில் கலந்து கொண்ட பெண் ஒருவர் பலியாகினார்.
அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த 3 வாரங்களுக்கு மேலாக தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா சிகிச்சைப் பெற்று வருகிறார். இதனையடுத்து, தமிழகம் முழுவதும் உள்ள அதிமுக தொண்டர்களும், நிர்வாகிகளும் முதலமைச்சர் ஜெயலலிதா பூரண குணமடைய வேண்டி ஏராளமான கோவில்களில் யாகங்கள் மற்றும் சிறப்பு பூஜைகள் நடத்தி வருகின்றனர்.
அப்பல்லோ மருத்துவமனை வாசலிலும் தொடர்ந்து பூஜை, யாகம், அதிமுகவின் பல்வேறு பிரிவுகள் சார்பில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல்லில் உள்ள நின்ற நாராயண பெருமாள் கோவிலில் யாகம் நடைபெற்றது.
அதில் அப்பகுதியைச் சேர்ந்த ஏரளமான பெண்களை அதிமுக நிர்வாகிகள் அழைத்து வந்தனர். இதனால், கோவிலுக்குள் கடும் நெரிசல் ஏற்பட்டது. மேலும், யாகத்தினால் உண்டான கடும் புகையால், ஒரு பெண்ணுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது.
இதனால் அவர் கோவிலுக்குள் மயக்கமடைந்தார். அவரை அங்கிருந்தவர்கள், மீட்டு, தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், சிறிது நேரத்திற்கு முன்பாகவே அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
பின்பு, நடத்திய விசாரணையில் நெரிசலில் சிக்கி உயிரிழந்த அந்த பெண் திருத்தங்கல், பள்ளபட்டி சாலையில் உள்ள கக்கன் காலனியைச் சேர்ந்த பொன்னுத்தாய் (55) என்பது தெரிய வந்தது.
அதிமுகவினர் நடத்திய யாகத்தில் கலந்து கொண்டபெண் பலியான சம்பவத தால்திருத்தங்கல் பகுதி முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் பொன்னம்மாள் மாரடைப்பால் பலியானதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.