வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Modified: புதன், 6 ஜூலை 2016 (22:30 IST)

ஆசிரியர் தகுதித் தேர்வு ஏன் நடத்தவில்லை? தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி

ஆசிரியர் தகுதித் தேர்வு ஏன் நடத்தவில்லை? தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி

இந்திய அரசின் கட்டாயக் கல்விச்சட்டத்தின் அடிப்படையில் ஆசிரியர் நியமனத்திற்கான தகுதித் தேர்வினை ஆண்டுக்கு இரண்டு முறை நடத்த வேண்டும். ஆனால், தமிழக அரசு மூன்று ஆண்டுகளாக ஆசிரியர் தகுதித் தேர்வை (Teacher's eligibility Test) நடத்தாமல் உள்ளதாக மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டியுள்ளார்.
 

 
இது குறித்து, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசு உத்தரவின்படி 1-ம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியில் சேர வேண்டுமானால் ஆசிரியர் தகுதித் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்ற நிலையில் இப்படி மூன்று வருடங்களுக்கு மேல் தகுதித் தேர்வை நடத்தாமல் இருப்பது வேலை வாய்ப்பை எதிர்நோக்கி காத்திருக்கும் எண்ணற்ற இளைஞர்களின் வாழ்வை இருள் சூழ வைத்துள்ளது.
 
குறிப்பாக அதிமுக ஆட்சியில் கடந்த மூன்று வருடங்களாக பட்டப் படிப்பு முடித்தவர்கள் இத்தேர்வை எழுத முடியாமல் தவிக்கிறார்கள். ஏற்கனவே ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் கழக ஆட்சியில் நியமிக்கப்பட்டு, 2016 வரை இந்த தகுதி தேர்வை எழுத வழங்கப்பட்ட கால அவகாசமும் 1665 ஆசிரியர்களுக்கு நிறைவடையும் சூழ்நிலையில், மாநிலத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்துவது பற்றி எந்த வித அறிவிப்பையும் அதிமுக அரசு வெளியிடாமல் இருப்பது புரியாத புதிராக இருக்கிறது. இதனால் ஆசிரியர் பணியில் புதிதாக சேர விரும்புவோரும், ஏற்கனவே ஆசிரியர் பணியில் சேர்ந்து இந்த தேர்வை எழுத முடியாத காரணத்தால் மருத்துவ விடுப்பு, ஊக்கத் தொகை, ஊதிய உயர்வு உள்ளிட்ட சலுகைகளை பெற முடியாதவர்களும் கடும் சிரமத்திற்குள்ளாகியிருக்கிறார்கள்.
 
உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால் தேர்வை நடத்த முடியவில்லை என்று மத்திய அரசுக்கு கல்வித்துறை செயலாளர் பதில் சொல்லியிருந்தாலும், அந்த வழக்கை துரிதப்படுத்த ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? தமிழகத்தில் ஆசிரியர் பணிக்கு படித்தவர்கள், ஆசிரியர் பணியில் இருப்போரின் பணிப் பிரச்சினைகளை உச்சநீதிமன்றத்தில் உரிய முறையில் எடுத்து வைத்து அந்த வழக்கை விரைந்து விசாரிக்க ஏன் முயற்சி செய்யவில்லை? மூன்று வருடங்களாக நடத்தப்படாமல் இருக்கும் ஆசிரியர் தகுதி தேர்வை உரிய காலத்தில் நடத்துவதற்கு ஏன் அதிமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்ற கேள்வி எழுகிறது. ஆசிரியர்கள் நலன் மற்றும் படித்து விட்டு வேலை இல்லாமல் இருக்கும் இளைஞர்களின் நலன் கருதி இனியாவது அதிமுக அரசு விழித்துக் கொண்டு ஆசிரியர் தகுதித் தேர்வை உடனடியாக நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். உச்சநீதிமன்றத்தில் உடனடியாக முறையிட்டு, இதை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க அனைத்து சட்ட பூர்வமான நடவடிக்கைகளையும் அதிமுக அரசு மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
 
மேலும், பள்ளிக்கல்வித்துறையில் 60 மாவட்டக் கல்வி அலுவலர்கள், 15 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகர்கள், 100க்கும் மேற்பட்ட உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், அதே அளவிலான மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களின் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. அத்துடன், ஆசிரியர்களுக்கான இடமாறுதால் தொடர்பான பொதுக் கலந்தாய்வும் ஜூலை மாதமாகியும் நடைபெறவில்லை. இவை அனைத்துமே கல்வித் துறையைப் பாழ்படுத்தி மாணவர்களின் எதிர்காலத்தை சீரழிக்கும் செயல்களாகும். இதனைக் கருத்திற்கொண்டு தமிழக அரசு விரைந்து செயல்பட்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.