போராட்டத்தை முடித்து கொள்ளுமாறு மிரட்டப்பட்டாரா அய்யாக்கண்ணு? அதிர்ச்சி தகவல்


sivalingam| Last Modified திங்கள், 24 ஏப்ரல் 2017 (23:03 IST)
விவசாயக் கடன் தள்ளுபடி, நதிகள் இணைப்பு, காவிரி மேலாண்மை வாரியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் தென்னிந்திய நதிகள் இணைப்புச் விவசாய சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் கடந்த 41 நாட்களாக நடைபெற்று வந்த போராட்டம் திடீரென நேற்று முடித்து கொள்ளப்பட்டது.


 


பிரதமர் நேரில் வந்து தங்களை சந்திக்கும் வரை போராட்டம் தொடரும் என உறுதியாக கூறி வந்த விவசாயிகள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சந்திப்பிற்கு பின்னர் திடீரென போராட்டத்தை நிறுத்தியது பல்வேறு சந்தேகங்களை தோற்றுவித்துள்ளது.

இந்த போராட்டத்தை நிறுத்திக்கொள்ளுமாறு அய்யாக்கண்ணு தரப்புக்கு டெல்லி போலீசாரிடம் இருந்து அழுத்தம் வந்ததாக ஊடகங்களில் செய்தி வெளியாகி வருகிறது. இதுகுறித்து பேட்டி ஒன்றில் அய்யாக்கண்ணு கூறியபோது, 'மத்திய அரசின் தூண்டுதல் காரணமாக போலீசார் எங்களுக்கு மிரட்டல் விடுத்தது உண்மைதான் . ‘யாராவது ஒருவனைக் கழுத்து அறுத்துக்கொண்டு வந்து இங்கே போட்டு விடுவோம்.ஒழுங்காகக் கலைந்து செல்லுங்கள்’ என்று மிரட்டினார்கள். ‘302-வது பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து உங்களை மட்டும் கைது செய்து உள்ளே தள்ளிவிட்டு மற்றவர்களை இங்கிருந்து அப்புறப்படுத்தி விடுவோம்’ என்று மிரட்டினார்கள். இப்படி பலவகையிலும் மிரட்டல் விடுத்துப் பார்த்தார்கள். நாங்கள் எங்களுடைய நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்க வில்லை. தற்போது தமிழக அரசியல் தலைவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இந்தப் போராட்டத்தை தற்காலிகமாகத் தள்ளி வைத்துள்ளோம். மத்திய அரசு   எங்களுடைய கோரிக்கைளை நிறைவேற்றவில்லை என்றால் எங்களுடைய போராட்டம் தொடரும்" என்று கூறினார்.

ஆனால் உண்மையில் டெல்லி செய்தியாளர்கள் மத்திய அரசிடம் இருந்து  வந்த அழுத்தம்தான் போராட்டம் திடீரென முடிவுக்கு வந்ததற்கு காரணம் என உறுதியாக கூறுகின்றனர்.


இதில் மேலும் படிக்கவும் :