செவ்வாய், 2 ஜூலை 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: ஞாயிறு, 8 மே 2016 (14:14 IST)

வெள்ளம் வந்தபோது இலவச மின்சாரம் அறிவிக்காதது ஏன்? - விஜயகாந்த் கேள்வி

கடலூரில் மழை வெள்ளம் வந்தபோது மின்சாரம் இல்லை. தானே புயல் தாக்கியபோது ஜெயலலிதா இலவச மின்சாரம் அறிவிக்கவில்லை என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.
 

 
கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் தேமுதிக, மக்கள் நலக் கூட்டணி, தமாகா அணியின் சார்பில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது.
 
கூட்டத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கலந்து கொண்டு கூட்டணி கட்சி வேட்பாளர்கள் பண்ருட்டி சிவக்கொழுந்து (தேமுதிக), நெய்வேலி டி. ஆறுமுகம் (சிபிஎம்) கடலூர் ஏ.எஸ்.சந்திரசேகரன் (தமாகா), குறிஞ்சிப்பாடி பாலமுருகன் (தேமுதிக) ஆகியோரை ஆதரித்து பேசினார்.
 
அப்போது பேசிய விஜயகாந்த், “அதிமுக தேர்தல் அறிக்கையில் 100 யூனிட் வரை பயன்படுத்தினால் மின்சாரம் இலவசம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடலூரில் மழை வெள்ளம் வந்தபோது மின்சாரம் இல்லை. தானே புயல் தாக்கியபோது மின்சாரம் இல்லை.
 
மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். பலர் வருவாய் இழந்து தவித்தனர். அப்போது 100 யூனிட் மின்சாரம் இலவசம் என்று அறிவிக்க வேண்டியதுதானே. அப்போது ஏன் அவர் அறிவிக்கவில்லை.
 
குடும்ப அட்டை வைத்துள்ள அனைவருக்கும் இலவச செல்போன் என்று ஜெயலலிதா கூறியுள்ளார். இதுபோன்று தேர்தல் அறிக்கையில் இலவசங்களை அள்ளி விட்டிருக்கிறார். ஜெயலலிதாவின் இலவச அறிவிப்புகள் அனைத்தும், அவரது தோல்வி பயத்தை காட்டுகிறது.
 
திமுகவும், அதிமுகவும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான், இந்த இரு கட்சிகளும் ஊழல் கட்சிகள்தான். அவர்களை நீங்கள்தான் அகற்ற வேண்டும். இந்த சட்டமன்றத் தேர்தலில் 6 தலைவர்கள் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறோம். நிச்சயம் வெற்றி பெறுவோம்” என்றார்.