முழு அடைப்பு போராட்டம்: சென்னை ஸ்தம்பிப்பு!!
டெல்லியில் பல நாட்களாக போராடி வந்த விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் இன்று முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகள், தொழிற்சங்கங்கள், காவிரி டெல்டா விவசாயிகள் சங்கம் சார்பில் இன்று முழு கடை அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தன.
இதற்கு லாரிகள் மற்றும் மணல் லாரிகள் உரிமையாளர்கள் சங்கம், அனைத்து வியாபாரிகள் சங்கம், திரையரங்க உரிமையாளர்கள் சங்கம், ஆட்டோ ஓட்டுநர் சங்கம் என அனைத்துத் தரப்பும் விவசாயிகளுக்கு ஆதரவாக ஒன்றிணைந்து போராட்டத்தில் குதித்துள்ளன.
ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, அண்ணாசாலை, மயிலாப்பூர், ஆழ்வார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளன.
தமிழக அரசின் பேருந்துகள் வழக்கம் போல் செயல்படும் என்று அரசு அறிவித்திருந்தாலும், பேருந்துகள் மிகவும் குறைவாகவே இயக்கப்படுகின்றன.
பால், பெட்ரோல் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களைத் தவிர வேறு எந்தக் கடைகளும் திறக்கப்படாமல் உள்ளன.
ஜாம்பாஜார் மார்க்கெட், கோயம்பேடு மார்க்கெட் அடைக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் சென்னை முழுவதுமே இதே நிலை நிலவுகிறது.