இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் இன்றும் நாளையும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வரும் காரணமாக தமிழகத்தில் உள்ள சில பகுதிகளிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்றும் நாளையும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேலும், ஜனவரி ஒன்றாம் தேதி புத்தாண்டு தினத்திலும் மழை பெய்யும் என்று தகவல் வெளியாகி உள்ளன.
இந்த நிலையில் இன்று மதியம் ஒரு மணி வரை, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தென்காசி, திருவள்ளூர் மற்றும் கன்னியாகுமரி ஆகிய பகுதிகளில் மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும் நாளையும் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், சில இடங்களில் லேசான மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், தென் மாவட்ட கடலோரம், மன்னார் வளைகுடா மற்றும் குமரி கடல் பகுதிகளில் மணிக்கு 55 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என்பதால், இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Edited by Siva