1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Updated : புதன், 8 மார்ச் 2017 (15:49 IST)

சுவாதி கொலை வழக்கை எப்படி முடிக்கலாம்....விடமாட்டோம்; வழக்கறிஞர் ராம்ராஜ் ஆவேசம்

சுவாதி கொலை வழக்கை எப்படி முடித்துவைத்தார்கள் என்பது குறித்த ஆவணங்களைச் சேகரித்துவருகிறோம், மத்திய புலனாய்வு அமைப்பின் விசாரணைக்கு உத்தரவிடக் கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம் என ராம்குமார் தரப்பு வழக்கறிஞர் ராம்ராஜ் கூறியுள்ளார். 


 

 
சென்னையைச் சேர்ந்தவர் மென்பொரியாளர் சுவாதி கடந்த ஆண்டு ஜூன் மாதம் 24ம் தேதி நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.  நாட்டையே உலுக்கிய இந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார் புழல் சிறையில் மின் வயரை கடித்து தற்கொலை செய்துகொண்டார்.
 
குற்றவாளியாக கைது செய்யப்பட்ட ராம்குமார் இறந்துவிட்டதால், சுவாதி கொலை வழக்கை முடித்து வைப்பதாக எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம் நேற்று அறிவித்தது.
 
இந்நிலையில் ராம்குமார் தரப்பு வழக்கறிஞர் ராம்ராஜ் இந்த வழக்கு முடியவில்லை என கூறியுள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:- 
 
ஆள் வழக்கு ஆளுடன் முடியும் என்பது குற்றவியல் வழக்குகளின் நியதி. சுவாதி கொலை வழக்கில், ராம்குமார்தான் குற்றவாளி என்பது இன்னமும் உறுதி செய்யப்படவில்லை.ராம்குமார் குற்றவாளி என்பதை நீருபித்து இருந்தால், இந்த வழக்கை முடித்து இருக்கலாம். 
 
சுவாதி கொலை வழக்கை எப்படி முடித்துவைத்தார்கள் என்பது குறித்த ஆவணங்களைச் சேகரித்துவருகிறோம். இன்னமும் ராம்குமாரின் பிரேதப் பரிசோதனை அறிக்கையைக்கூட எங்களுக்குத் தரவில்லை. 
 
அனைத்து ஆவணங்களும் எங்கள் கைக்கு வந்த பிறகு, மத்திய புலனாய்வு அமைப்பின் விசாரணைக்கு உத்தரவிடக் கோரி, நீதிமன்றத்தில் வழக்கு தொடர இருக்கிறோம், என்று கூறியுள்ளார்.