1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : புதன், 1 ஜூலை 2015 (06:33 IST)

புள்ளி வைத்த வைகோ - துள்ளி எழுந்த தமிழக அரசு

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ போராட்ட அறிவிப்பின் எதிரொலியாக,  ஸ்ரீவைகுண்டம் அணையில் தூர்வாரும் பணிகளை தமிழக அரசு உடனே தொடங்கியது.
 

 
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அணை 8 அடி ஆழம் கொண்டது. இந்த அணையின் தண்ணீரை நம்பி பல ஆயிரம் ஏக்கருக்கு மேல் விவசாயம் நடைபெறுகிறது. ஆனால், இந்த அணைக்கு முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தினால்,  அணையில் மண் மற்றும் கழிவுகள் தேங்கி, மண்மேடாகி ஒரு அடியாக மாறிவிட்டது.
 
இதனால், ஆண்டுதோறும் மழைக் காலங்களில் 10 டி.எம்.சி தண்ணீர் வீணாக கடலில் கலக்கும் அவலம் ஏற்பட்டது. எனவே,  ஸ்ரீவைகுண்டம் அணையை தூர் வாரும்படி கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக விவசாயிகளும், அப்பகுதி பொது மக்களும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.
 
மேலும், இந்த அணையை தூர்வார உத்தரவிடக்கோரி மதிமுக மாவட்ட செயலாளர் ஜோயல் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். இதனையடுத்து, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அணையை தூர் வாருவதற்கான அனுமதியை ஜூன் 10ஆம் தேதி வழங்கியது. அதன் பின்பும், தமிழக அரசு அணையை தூர்வார்முன்வரவில்லை.
 
இதனையடுத்து, விவசாயிகளை திரட்டி ஜூலை 6ஆம் தேதி தூர் வாரும் பணியை துவங்குவோம் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்தார்.
 
இந்நிலையில், தமிழக அரசின் உத்தரவின் பேரில் நேற்று மாலை பொதுப் பணித்துறையினர் ஸ்ரீவைகுண்டம் அணையில் தூர்வாரும் பணிகளை பூமி பூஜையுடன் அவசரகதியில் துவங்கினர்.