1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : திங்கள், 2 மே 2016 (18:03 IST)

’அதிகாரிகள் மாற்றியதை ஏற்க முடியாது’ - தேர்தல் ஆணையத்திடம் அதிமுக புகார்

தமிழகத்தில் அதிகாரிகள் பணி மாற்றத்தை ஏற்க முடியாது என்றும் அதனை திரும்ப பெற வேண்டும் என்று தலைமை தேர்தல் ஆணையர் நதீம் ஜைதியிடம், அதிமுகவினர் மனு அளித்துள்ளனர்.
 

 
கடந்த சில தினங்களுக்கு முன்பு கரூர், திருவண்ணாமலை, திருவாரூர், நெல்லை, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர்கள் மாற்றப்பட்டனர். மேலும், உளவுத்துறைக்கும் புதிய ஏ.டி.ஜி.பி.யும், தேர்தல் டி.ஜி.பி.யும் மாற்றம் செய்யப்பட்டனர்.
 
இந்நிலையில், திருவனந்தபுரத்தில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதியிடம் அதிமுக எம்.பி.க்கள் தம்பித்துரை, வேணு கோபால், நவநீதகிருஷ்ணன் ஆகியோர் சந்தித்து மனு ஒன்றினை அளித்தனர்.
 
அந்த மனுவில், "தமிழக சட்டசபை தேர்தலுக்கு தொடர்பில்லாத அதிகாரிகளை மாற்றி இருக்கும் விவகாரம் வழக்கத்துக்கு மாறான செயலாகும். இதனால் தேர்தலை சுமுகமாக நடத்துவது கடினமாகி விடும்.
 
தேர்தல் அறிவிப்பு கடந்த ஏப்ரல் 22ம் தேதி வெளியிடப்பட்டதில் இருந்து இதுவரை 9 மாவட்ட கலெக்டர்கள், 7 போலீஸ் சூப்பிரண்டுகள், 5 டி.எஸ்.பி.க்கள் மற்றும் ஒரு டி.ஆர்.ஓ.வை மாற்றம் செய்துள்ளது.
 
தமிழகத்தில் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டு இருப்பது தேர்தலை அமைதியாகவும், சுமுகமாகவும் நடத்த உதவாது என்று சுட்டிக்காட்ட நாங்கள் விரும்புகிறோம். தேர்தலுக்கு இன்னும் இரு வாரங்களே இருப்பதால் முக்கிய பொறுப்புகளில் புதிதாக நியமனம் செய்யப்பட்டவர்களால் தேர்தல் ஏற்பாடுகளை விரைந்து செயலாற்ற இயலாது.
 
எனவே தமிழ்நாட்டில் அதிகளவில் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டிருப்பதை கண்டிப்பதோடு, அதிகாரிகள் மாற்றம் தொடர்பான உத்தரவுகள் அனைத்தையும் திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்" என்று கூறப்பட்டுள்ளது.