அரசியலில் குதிக்கும் விஜயகாந்தின் மகன்?: மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனை
கடந்த சட்டசபை தேர்தலில் ஏற்பட்ட தோல்வியில் இருந்து தேமுதிகவை மீட்க விஜயகாந்தின் மகன் சண்முகப் பாண்டியனை கட்சிக்குள் கொண்டு வர வேண்டும் என மாவட்ட செயலாளர்கள் சந்திப்பில் பேசப்பட்டதாக கூறப்படுகிறது.
தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத கட்சியாக இருந்த விஜயகாந்தின் தேமுதிக இன்று அதன் மாநில கட்சிக்கான அங்கீகாரத்தை இழந்து அதள பாதாளத்துக்கு சென்றுள்ளது. இந்நிலையில் தேர்தலில் தேமுதிகவுக்கு ஏற்பட்ட மோசமான தோல்வி குறித்து ஆலோசித்து வருகிறார் விஜயகாந்த்.
கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் ஒவ்வொரு மாவட்ட செயலாளர்களையும் சந்தித்து வருகிறார் விஜயகாந்த். அவர்களுடன் தேர்தலில் கட்சிக்கு ஏற்பட்ட மிகப்பெரிய தோல்விக்கான காரணத்தையும், கட்சியை வலுபெற வைத்து, உள்ளாட்சி தேர்தலில் தங்கள் பலத்தை நிரூபிக்க என்ன செய்யலாம் என ஆலோசித்து வருகிறார்.
அதில் மாவட்ட செயலாளர்கள் பலர் மக்கள் நல கூட்டணியில் இருந்து தேமுதிக வெளியேற வேண்டும் எனவே கோரிக்கை விடுத்து வருவதாக அக்கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.
மேலும், தேமுதிகவுக்கு புது இரத்தம் பாய்ச்ச விஜயகாந்தின் மகன் சண்முகப் பாண்டியனை கட்சிக்குள் கொண்டு வர வேண்டும் என சில மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூறியதாகவும் தகவல்கள் வெளிவருகின்றன.