அமைச்சரின் வருகையால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் (வீடியோ)
கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அமைச்சர் ஆய்வினால் சுமார் 1 மணி நேரம் நோயாளிகள் மற்றும் நோயாளிகளை காண வந்த கைக்குழந்தையுடன் கூடிய தாய்மார்கள் வெளியில் நின்று அவதிப்பட்டனர்.
கரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அந்த தொகுதியின் எம்.எல்.ஏ வும், தமிழக போக்குவரத்து துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் காலை 11 மணிக்கு ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வந்ததையடுத்து, அப்பகுதியில் போலீஸார் மருத்துவர்கள் குவிக்கப்பட்டிருந்தனர். மேலும் அ.தி.மு.க வினரும் குவிந்திருந்தனர்.
இதனால் புறநோயாளிகள் மற்றும் உள்நோயாளிகள் வெளியே சென்று திரும்பியவர்கள் உள்ளே செல்ல முடியாமல் அவர்களை நுழைய விடாமல் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை நிர்வாகம் அவர்களை வெயிலில் காயவைத்தது. மேலும் நோயாளிகளை காணவந்த அவர்களது உறவினர்கள் மட்டுமில்லாமல் கைக்குழந்தையுடன் கூடிய தாய்மார்களும் தரையில் அமர்ந்து சுமார் 1 மணி நேரம் தவித்தனர்.
இதனை வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்த நிருபர்களின் செயல்களால் இந்த விஷயத்தை தெரிந்து கொண்ட அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஒரு மணிநேரம் கால் கடுக்க வெயிலில் நின்றவர்களை உள்ளே அனுப்புமாறும் தெரிவித்தார். இதனையடுத்து கட்சியினர் என்னை பார்ப்பதாக இருந்தால் பயணியர் மாளிகைக்கு செல்லுங்கள் என்று கூறியவுடன், அவர்களும் ஒரு மணி நேரம் உங்களுக்காக தானே வெயிலில் காத்திருந்தோம் என்று புலம்பிய படியே வெளியேறினர்.
அமைச்சரின் இந்த ஆய்வு நிகழ்ச்சி காரணமாக, மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டியிருந்ததால் நோயாளிகள் மற்றும், நோயாளிகளை பார்க்க வந்த உறவினர்கள் முகம் சுழித்ததோடு, அ.தி.மு.க வினரும் முகம் சுளித்தனர்.