செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 23 ஜூலை 2019 (17:50 IST)

போலீஸில் சிக்கிய பைக் திருடர்கள்: பிரபல ரவுடியை போட்டுத்தள்ள ப்ளான்?

சென்னையில் பல இடங்களில் பைக் திருடிய இருவரை போலீஸார் பைக்கும், கையுமாக பிடித்துள்ளனர். அவர்களை விசாரித்தபோது திடுக்கிடும் பல தகவல்கள் தெரிய வந்துள்ளது.

வடசென்னை பகுதியில் உள்ள வண்ணாரபேட்டையை சேர்ந்தவர் துளசிராம். சொந்தமாக பைக் வைத்திருக்கும் இவர் ஸ்விக்கியில் பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் ஆர்டர் ஒன்றை டெலிவரி செய்ய துளசிராம் போய்க் கொண்டிருந்தபோது பலத்த மழை பெய்துள்ளது. இதனால் சாலையோரம் மூடப்பட்டிருந்த கடை அருகே வண்டியை நிறுத்தியிருக்கிறார். அப்போது அங்கே குடிபோதையில் வந்த இருவர் துளசிராமை கத்தியால் தாக்கியுள்ளனர். அவர் பயந்து ஓடிய நேரத்தில் அவரது பைக்கை திருடிக் கொண்டு சென்று விட்டனர்.

இதுகுறித்து துளசிராம் போலீஸில் புகார் அளித்தார். அதே பகுதியில் வேறொரு இடத்தில் ஏற்கனவே இதுபோல பைக் திருடப்பட்டதாக போலீஸுக்கு ஏற்கனவே தகவல் கிடைத்திருந்தது. துளசிராம் தாக்கப்பட்ட இடத்திற்கு அருகே உள்ள சிசிடிவி காட்சிகளை போலீஸார் ஆராய்ந்துள்ளனர். இரண்டு இடங்களிலும் அதே ஆட்கள் பைக் திருடியிருப்பது தெரிய வந்தது. அவர்களை போலீஸார் தேடி வந்தனர்.

இந்நிலையில் நேற்று வண்ணாரப்பேட்டை பகுதியில் இரண்டு இளைஞர்கள் திருடப்பட்ட பைக் எண்ணை கூட மாற்றாமல் அதில் பயணம் செய்துள்ளனர். போலீஸார் அவர்களை மடக்கி பிடிக்க முயற்சித்தபோது ஒருவர் தப்பி விட்டார். சிக்கியவர் புதுவண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த லோகேஷ் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவரை விசாரிக்கையில் மேலும் சில அதிர்ச்சிகரமான உண்மைகள் தெரிய வந்தது. வடசென்னையில் உள்ள பிரபல ரவுடி கண்ணன் என்பவரை கொலை செய்வதற்காக அவர்கள் பைக்குஅலை திருடியது விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவர்களிடம் இருந்த திருடப்பட்ட பொருட்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.