வியாழன், 2 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 10 மார்ச் 2018 (11:25 IST)

ஜெயா தொலைக்காட்சியை கைப்பற்றிய அனுராதா? - அப்செட்டில் விவேக்?

இதுவரை சசிகலாவின் உறவினர் இளவரசியின் மகன் விவேக் கவனித்து வந்த ஜெயா தொலைக்காட்சி நிர்வாகம் தற்போது டிடிவி தினகரன் மனைவி அனுராதா கையில் வந்திருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

 
நீண்ட வருடங்களாகவே ஜெயா தொலைக்காட்சியை அனுராதாதான் கவனித்து வந்தார். ஆனால், ஜெ.வின் மறைவிற்கு பின் அந்த பொறுப்பை விவேக்கிடம் ஒப்படைத்தார் சசிகலா. அதில் தினகரனுக்கும் அதிருப்தி இருந்தது. எனவே, சிறையில் சசிகலாவை சந்திக்கும் போதெல்லாம் விவேக் பற்றி பல புகார்கள் தினகரன் கூறிவந்தார்.
 
குறிப்பாக, திமுக எதிர்கட்சி துணைத் தலைவர் துரைமுருகனின் பேட்டி ஜெயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது தினகரனுக்கு பிடிக்கவே இல்லை. எனவே, தனது மனைவி அனுராதாவிடம் மீண்டும் பொறுப்பை ஒப்படைக்குமாறு சசிகலாவிடம் தினகரன் ஏற்கனவே கோரிக்கை வைத்திருந்தார். அதற்கு சசிகலாவும் ஒப்புதல் கொடுத்து விட்டார். 
 
அந்நிலையில், சமீபத்தில் ஜெயா தொலைக்காட்சி அலுவலகத்திற்கு வந்த அனுராதா, விவேக்கிடம் சில நிமிடங்கள் வாக்குவாதம் செய்துள்ளார். அதனையடுத்து, விவேக் அங்கிருந்து கோபமாக வெளியேறிவிட்டார். அதன்பின், அங்கிருக்கும் ஊழியர்களை அழைத்து இனி நான்தான் நிர்வாகத்தை கவனிக்கப் போகிறேன். அம்மா இருந்த போது அவர்களை பற்றிய செய்திதான் தலைப்பு செய்தியில் இருக்கும். அதேபோல், இனிமேல் நமது தலைவர் தினகரனின் செய்திக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என கறாராக கூறிவிட்டாராம். அதைத் தொடர்ந்த கடந்த சில நாட்களாக தினகரன் தொடர்பான செய்திகளே ஜெயா தொலைக்காட்சியில் அதிகம் இடம் பெறுகிறது.

 
இதனால் அதிருப்தியில் இருக்கும் விவேக் இதுபற்றி சசிகலாவிடம் முறையிட  நேற்று முன் தினம் பெங்களூர் சென்றார். ஆனால், அவரை பார்க்க முடியவில்லை. நேற்று ஜெ. மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தில்  ஆஜராக வேண்டியிருந்ததால் நேற்று அவர் மீண்டும் சென்னைக்கு திரும்பிவிட்டார்.
 
ஜெயா தொலைக்காட்சி நிர்வாகம் தனது மனைவியின் கட்டுப்பாட்டில் வந்ததில் தினகரன் தரப்பிற்கு ஏக மகிழ்ச்சி எனக் கூறப்படுகிறது.