1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: புதன், 19 ஏப்ரல் 2017 (12:59 IST)

வெளிநாடு தப்பி செல்ல திட்டமிட்டிருந்தாரா தினகரன்?

டெல்லி போலீசாரின் பிடியில் சிக்குவதை தவிர்க்க வெளிநாட்டிற்கு தப்பி செல்லும் முயற்சியில் அதிமுக துணைப் பொதுச்செயாலாளர் தினகரன் ஈடுபட்டிருந்தார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.


 

 
அதிமுக சின்னமான இரட்டை இலை சின்னத்தை பெற டெல்லியை சேர்ந்த சுகேஷ் சந்தர் என்பவரிடம் தினகரன் ரூ.60 கோடி பேரம் பேசி, ரூ.10 கோடியை முன்பணமாக கொடுத்தார் என டெல்லி போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். மேலும், சுகேஷ் சந்தரை நேற்று முன் தினம் அதிகாலை போலீசார் கைது செய்ததோடு, அவரிடமிருந்து ரூ.1 கோடி 30 லட்சம் பணத்தையும் கைப்பற்றியுள்ளனர். மீதி பணம் ரூ. 8 கோடியே ரூ.70 லட்சம் எங்கே இருக்கிறது என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும், இதில் தினகரனுக்கு எதிரான வலுவாக ஆதாரங்களை அவர்கள் சேகரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
 
நேற்று அவர்கள் சென்னை வந்து தினகரனிடம் விசாரணை நடத்த இருப்பதாகவும், அவர் கைது செய்யப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சுகேஷ் சந்தரிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை செய்து வருவதால், அவர்கள் நேற்று சென்னை வரவில்லை என செய்திகள் வெளியானது.
 
இந்நிலையில், டெல்லி போலீசாரின் பிடியிலிருந்து தப்பி செல்ல தினகரன் திட்டமிட்டிருந்தார் என சில தகவல்கள் கசிந்துள்ளன. ஏனெனில், டெல்லி போலீசாரிடமிருந்து இந்திய விமான நிலைய அதிகாரிகளுக்கு ஒரு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. அதில் தினகரன் வெளிநாடு தப்பி செல்ல வாய்ப்புள்ளது. எனவே, அவரது வருகையை கூர்ந்து கவனியுங்கள் என எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. இதை டெல்லி போலீசார் சிலரும் உறுதி செய்துள்ளனர்.
 
மேலும், ஏற்கனவே போலீசாரிடம் பிடிபட்ட சுகேஷ் சந்தருடன், தினகரன் தொடர்ந்து தொலைப்பேசியில் பேசி வந்துள்ளார் என்பதற்கான ஆதாரங்கள் டெல்லி போலீசார் வசம் இருப்பதாகவும்,  தன்னுடையை செல்வாக்கை பயன்படுத்தி இரட்டை இலை சின்னத்தை மீட்டுத் தருவதாக, தினகரனிடம் சுகேஷ் சந்தர் வாக்குறுதி அளித்ததும் தெரிய வந்துள்ளது.
 
இதுபற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த தினகரன் “எனது பாஸ்போர்ட் பல ஆண்டுகளாக நீதிமன்றத்தில் இருக்கிறது நான் எப்படி வெளிநாடு தப்பி செல்வேன்” என கேள்வி எழுப்பியுள்ளார். அதேபோல், அதிமுகவிலிருந்து விலகி விட்டதாகவும் அவர் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
 
தினகரனின் இந்த திடீர் மனமாற்றத்தை பார்க்கும் போது, டெல்லி போலீசாரின் சந்தேகத்தில் உண்மை இருக்க வாய்ப்பிருக்கிறது என சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.