நாடாளுமன்ற தேர்தலை கூட்டணி அமைத்து சந்திப்போம்!? – அதிமுகவுக்கு டிடிவி தினகரன் அழைப்பு!
அதிமுகவில் அனைவரும் இணைய வேண்டுமென ஓ.பன்னீர்செல்வம் கூறி வரும் நிலையில் நாடாளுமன்ற தேர்தலை ஒன்றிணைந்து சந்திக்கலாம் என அழைப்பு விடுக்கும் வகையில் பேசியுள்ளார் டிடிவி தினகரன்.
அதிமுகவில் ஈபிஎஸ் – ஓபிஎஸ் இடையே தொடர் மோதல் நிலவி வந்த நிலையில் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் எனவும் சசிக்கலா, டிடிவி தினகரனையும் அழைக்கலாம் எனவும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் ஓபிஎஸ்சின் கருத்துக்கு ஈபிஎஸ் ஆதரவாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், சசிக்கலா, டிடிவி தினகரனை அதிமுகவில் இணைக்க வாய்ப்பே இல்லை என பேசி வருகின்றனர். அதேசமயம் ஓபிஎஸ்சின் அனைவரும் ஒன்றிணையும் கருத்தை டிடிவி தினகரன் வரவேற்றுள்ளார்.
இந்நிலையில் தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய அமமுக பொதுசெயலாளர் டிடிவி தினகரன் “அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என ஓபிஎஸ்சின் கருத்தை வரவேற்கிறேன். தீய சக்தியான திமுகவை ஆட்சி பொறுப்பில் இருந்து அகற்ற வேண்டுமானால் அவரவர் அவரவராகவே இணைய வேண்டும். பழைய மனக்கசப்புகளை மறந்து நண்பர்களாக, பங்காளிகளாக செயல்பட வேண்டும்.
யாரும் யாருடனும் இணைய வேண்டாம். அனைவரும் இணக்கமாக இருந்து செயல்பட வேண்டும். பாராளுமன்ற தேர்தலில் அனைவரும் இணைந்து தேர்தலை எதிர்கொள்வோம்” என்று அழைப்பு விடுக்கும் வகையில் பேசியுள்ளார்.
கட்சியாக ஒன்றாக இணையாவிட்டாலும் கூட்டணி அமைத்தாவது தேர்தலை எதிர்கொள்ளலாம் என டிடிவி தினகரன் அழைப்பு விடுத்துள்ள நிலையில் இதற்கு அதிமுகவினர் ரியாக்சன் என்னவாக இருக்கும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.