வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Updated : ஞாயிறு, 18 மே 2014 (12:41 IST)

தேர்தல் தோல்வி குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் அறிக்கை

தேர்தல் தோல்வி குறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஞானதேசிகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் ஒரு தனித்துவமான தேர்தலாகும். 10 ஆண்டுகாலம் அன்னை சோனியா காந்தியின் வழி காட்டுதலில் நடைபெற்ற டாக்டர் மன்மோகன் சிங் அரசில் ஏராளமான வளாச்சித் திட்டங்கள் சாதனைகள் ஸ்திரமான பொருளாதாரம் சமூகத்தில் நலிந்த பிரிவினருக்கு ஏராளமான திட்டங்கள், சிறுபான்மையினர் நலன் காக்க பிரதமரின் 15 அம்ச திட்டம், நூறு நாள் வேலை வாய்ப்பு, ஜவஹர்லால் நேரு நகர புனரமைப்பு திட்டம், சுகாதாரத்துறையில் மாபெரும் புரட்சி, கிராமப்புற வளர்ச்சி, சாலைகள், மேம்பாலங்கள், புதிய ரயில்கள் என்று பட்டியல் தொடர்ந்தது.
 
இந்த ஆட்சி மாறுகிறபோது 1,81,000 கோடி ரூபாய் அன்னிய செலாவணி கையிருப்பில் வைத்துவிட்டுச் செல்கிறோம். பி.எல்.480 அமெரிக்க கோதுமையை குழந்தைகளுக்கு இலவசமாக வாங்கிய நாடு, தங்கத்தை அடகு வைத்து நமது பொருளாதாரத்தை சரிகட்ட கடன் வாங்கிய அரசு சந்திரசேகர் தலைமையிலான அரசாகும். தங்கத்தை மீட்டு, கடனை அடைத்து, பிற நாடுகளுக்கு கடனும் சில இயற்கை பேரழிவு நிகழ்வுகளின்போது பிற நாடுகளுக்கு பொருளாதார உதவியும் செய்கிற, செய்கின்ற வலிமையை உருவாக்கிக் கொடுத்தது காங்கிரஸ் அரசாகும்.
 
தனிமனித ஊழல்கள் சமூகத்தில் தவிர்க்க முடியாதது. ஆனால் அந்த ஊழல்கள் மீது கட்சி மாச்சர்யங்கள் இல்லாமல் சுதந்திரமாக நடவடிக்கை எடுத்திருக்கிறோமா என்றால், ஆம் என்கிற பதில் தான் உரத்து வரும். ஆனாலும் ஊழல் என்கிற அந்த முகமூடியை மிக கெட்டிக் காரத்தனமாக காங்கிரஸ் அரசு மீது பாஜக சுமத்தியது. வலிமையான பிரச்சார யுக்திகள், இந்தியாவின் பெரும் பணக்காரர்களின் அருளாசிகள், சமூகத்தை பிரித்து வைக்கிற மத வேற்றுமைகளை அதிகப்படுத்துகிற, வளர்க்கிற கூட்டத்தின் ஓலங்கள், சில ஊடகங்களின் ஆதிக்கம், இவையெல்லாம் ஒட்டுமொத்தமாய் காங்கிரஸ் கட்சி இந்தியாவில் தோல்வியை சந்திக்க வைத்திருக்கிறது.

1984-ல் 404 இடங்களை காங்கிரஸ் கட்சி பெற்ற காலமும், எதிர் வரிசையில் மாநில கட்சியான தெலுங்கு தேசம் வெறும் 30 இடங்களைப் பெற்று அமர்ந்ததும், பாஜக அப்போது 2 இடங்களைப் பெற்றதும் வரலாற்று உண்மை. 2 இடங்களை மட்டுமே நாடாளுமன்றத்தில் பெற்ற எம்.ஜி.ஆர். 6 மாதத்திற்குப் பிறகு சட்டமன்றத்தை பிடித்த வரலாறும் தமிழகத்தில் நடந்தேறியிருக்கிறது.
 
ஆகவே, இந்த தோல்வி என்பது ஆராய்ச்சிக்குரியது. ஆனால் கவலைக்குரியதல்ல. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஒரே மாதிரியாக மக்களின் மனோநிலை ஏன் வந்தது என்பதை யோசிக்க வேண்டும். ஆனால் அதற்காக கட்சியினர் துவண்டு போக வேண்டிய அவசியம் இல்லை. இந்த தேர்தலில் கடும் உழைப்பை தந்த சோனியா காந்தி அம்மையாருக்கும் இளம் தலைவர் ராகுல்காந்திக்கும் என் நன்றி உரித்தாகும்.
 
ஏற்கனவே ஒரு அறிக்கையில் நான் குறிப்பிட்டதைப் போல, பல்வேறு பொருளாதார நெருக்கடியிலும் கண் துஞ்சாது, இந்த இயக்கத்திற்காக பாடுபட்ட காங்கிரஸ் கட்சி தோழர்களை தாழ் பணிந்து வணங்குகிறேன். வாக்களித்த மக்களுக்கு எங்களது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த முறை வாக்களிக்காத மக்கள் தங்களது நிலையை எதிர்காலத்தில் மறுபரிசீலனை செய்வார்கள் என நம்புகிறேன். தேர்தல் பணியாற்றிய தமிழக காங்கிரஸ் தலைவர்கள் அனைவருக்கும் எனது நன்றி. 40 தொகுதிகளிலும் சுற்றி வந்து தேர்தல் பணியாற்றிய ஜி.கே.வாசனுக்கு எங்களுடைய நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.
 
"போற்றுவதால் என் உடல் புல்லரிக்காது - தூற்றுவதால் என் மனம் இறந்துவிடாது" என்று கவியரசு சொன்னதைப் போல, தோற்பதால் நாங்கள் துவண்டுவிட மாட்டோம் என்கிற புதிய கோஷத்தோடு மீண்டும் நம் பயணத்தை தொடருவோம்.
 
இவ்வாறு தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஞானதேசிகன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.