1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : ஞாயிறு, 11 செப்டம்பர் 2016 (16:33 IST)

ஆதிக்க சாதி ஆணை காதல் திருமணம் செய்ததால் கொடுமைக்குள்ளாகும் இளம்பெண்

ஆதிக்க சாதி ஆணை நான்கு ஆண்டுகள் காதலித்து திருமணம் செய்து கொண்ட பெண்ணை சாதியை காரணம் காட்டி பிரிந்து போகச் சொல்லி மிரட்டி கொடுமைப்படுத்தும் சம்பவம் அம்பலமாகியுள்ளது.
 

 
விழுப்புரம் மாவட்டம், சின்னசேலம் அருகில் உள்ள எலியத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமி. ஆதிதிராவிட வகுப்பைச் சேர்ந்த இவரை, பக்கத்து ஊரான பைந்துரையில் வசிக்கும் வேறு ஆதிக்க சாதியை சேர்ந்த பெரியசாமி மகன் முத்துக்குமார் 4 ஆண்டுகளாக காதலித்து பின் கடந்த 19.10.2015 அன்று இந்திலி கிராமத்தில் உள்ள முருகன் கோயிலில் திருமணம் செய்து கொண்டுள்ளார்.
 
பின்னர், எலியத்தூரிலுள்ள லட்சுமியின் வீட்டிலேயே வசித்து வந்துள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் முத்துக்குமாரின் உறவினர் சண்முகம் லட்சுமி வீட்டிற்கு வந்து இழிவான வார்த்தைகளால் திட்டி அவரது கணவரை அடித்து இழுத்துச் சென்றுள்ளார்.
 
எவ்வளவு கெஞ்சியும் விடாததால் போலீசிடம் போவதாக கூறிய பின் கணவரை அனுப்பியுள்ளனர். பின் தொடர்ந்து பல்வேறு வகைகளில் சண்முகம், லட்சுமிக்கு மிரட்டல் விடுத்து வந்துள்ளார். மேலும், முத்துக்குமாரின் குடும்பத்தினர் மனைவி முத்துக்குமாரை லட்சுமியிடம் இருந்து தனியாக பிரிப்பதில் மும்முரமாக இருந்துள்ளனர்.
 
இதனை தொடர்ந்து எலியத்தூர் சுடுகாட்டில் முத்துக்குமார், லட்சுமியின் காதில் விஷத்தை ஊற்றி விட்டு அவரும் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். தகவலறிந்து அங்கு வந்த உறவினர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்று பின், சிகிச்சை அளித்து காப்பாற்றியுள்ளனர்.
 
மேலும், ஆத்திரமடைந்த சாதி ஆதிக்க சக்திகள் லட்சுமியின் வீட்டை தீ வைத்து எரித்துள்ளனர். மிரட்டல் தொடர்ந்ததால் கடந்த ஆகஸ்ட் மாதம் 22 ஆம் தேதி விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார்.
 
அவர்களின் அறிவுறுத்தலின்படி 23ஆம் தேதி கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இருதரப்பையும் விசாரணைக்கு அழைத்த காவல் நிலைய ஆய்வாளர் எதிர் தரப்பினர் சொல்வதுபோல் நடந்து கொள்ளச் சொல்லி லட்சுமியை மிரட்டியுள்ளார்.
 
அவர்களிடம் ஐம்பதாயிரம் ரூபாய் பெற்றுக்கொண்டு லட்சுமி பிரிந்து செல்ல சம்மதிப்பதாக எழுதி காவல் ஆய்வாளர் முன்னிலையில் மிரட்டி கட்டாயப்படுத்தி கையொப்பம் பெற்றுள்ளனர்.
 
இதையறிந்த தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் மற்றும் ஜனநாயக மாதர் சங்கத்தினர் பாதிக்கப்பட்ட லட்சுமி, அவரது தாயார் ஆகியோருடன் விழுப்புரம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.