வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : வெள்ளி, 7 ஜூலை 2017 (16:00 IST)

ஜி.எஸ்.டியை வைத்து திரையரங்குகள் மறைமுகமாக கொள்ளை - பகீர் தகவல்

மத்திய அரசு அறிமுகப்படுத்திய ஜி.எஸ்.டியை சாக்காக வைத்து, தமிழகத்தின் திரையரங்குகளில் டிக்கெட் விலையை மறைமுகமக 45 சதவீதம் உயர்த்தி மக்கள் பணத்தை திரையரங்க உரிமையாளர்கள் கொள்ளையடிப்பது அதிர்ச்சியடைய வைத்துள்ளது.


 

 
ஏற்கனவே ஜி.எஸ்.டி வரி 28 சதவீதமாக இருக்கும் போது, தமிழக அரசு சார்பில் கேளிக்கை வரியை 30 சதவீதமாக அதிகரித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 3ம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளும் மூடப்பட்டன. இது தொடர்பாக தமிழ்நாடு திரையரங்க வர்த்தக சபையின் தலைவர் அபிராமி ராமநாதன் தலைமையில், தமிழக அரசுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு, திரைத்துறை மீது விதிக்கப்பட்ட 30 சதவீத கேளிக்கை வரி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
 
இன்று முதல் தியேட்டர்கள் திறக்கப்பட்டன. ஆனால், ரூ.120 டிக்கெட் விலை ஜி.எஸ்.டி யோடு சேர்த்து ரூ.153/- என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 
 
பொதுவாக, டிக்கெட் விலை ரூ.84.30 மற்றும் கேளிக்கை வரி உட்பட மற்ற வரிகள் ரூ.35.70 ஆகியவற்றை சேர்த்துதான் மக்களிடமிருந்து ரூ.120 வசூலிக்கப்படுகிறது. இதில், தமிழில் பெயர் வைத்தால், கேளிக்கை வரியிலிருந்து முழு விலக்கு அளிக்கப்படுகிறது. அப்படி விலக்கு அளிக்கப்படும் படங்களுக்கு மக்களிடமிருந்து 85 ரூபாய் மட்டுமே வசூலிக்கப்பட வேண்டும். ஆனால், பலவருடங்களாக ரூ.35-ஐ சேர்த்துதான் சினிமாத் திரையரங்குகள் மக்களிடமிருந்து வசூலித்து வந்தனர்.
 
தற்போது ஜி.எஸ்.டி வந்துவிட்டதால், திரையரங்க அதிபர்கள் போராட்டத்தை அடுத்து தற்காலிகமாக கேளிக்கை வரி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே, நியாயப்படி டிக்கெட் விலை ரூ.84.30 மற்றும் 28 சதவீத ஜி.எஸ்.டி ரூ.109/- மட்டுமே வசூலிக்கப்பட வேண்டும். ஆனால், கேளிக்கைவரியை குறைக்காமல் ரூ.120 உடன்  ஜி.எஸ்.டி என சேர்த்து ரூ.153/- வசூலிக்கப்பட்டு வருகிறது.
 
அதாவது, பழைய கேளிக்கை வரியை கழிக்காமல், நேரடியாக ரூ.120 உடன் ஜி.எஸ்.டி வரியை சேர்த்து மறைமுகமாக ரூ.45 சதவீதம் டிக்கெட் விலையை உயர்த்தி, அதை ரசிகர்களிடமிருந்து கட்டணமாக வசூலிக்க இருக்கிறார்கள்.  இது திட்டமிட்ட மறைமுக கொள்ளையாகவே பார்க்கப்படுகிறது.