ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : திங்கள், 18 டிசம்பர் 2023 (15:20 IST)

'ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் செயல்பட வேண்டி 'தேமுதிக அறிக்கை

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தென்தமிழகத்தில் ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் செயல்பட வேண்டி , தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின்  பொதுச்செயலாளர்  பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் இன்று  வெளியிட்ட அறிக்கை  வெளியிட்டுள்ளார்.
 

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் கழக பொதுச்செயலாளர்பிரேமலதா விஜயகாந்த் அவர்கள்மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தென்தமிழகத்தில் ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் செயல்பட வேண்டி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில்,

''மிக்ஜாம் புயல் சென்னை மக்களை புரட்டி போட்ட நிலையில், தற்போதுதிருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில்வரலாறு காணாத அளவிற்கு கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் தாழ்வானபகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மக்கள் வெளியே செல்லமுடியாமல் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர். திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள சேவியர் காலனியில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. திருநெல்வேலி டவுன் வ.உ.சி. தெரு, பாரதியார் தெரு, பாளையங்கோட்டை சமாதானபுரம் பகுதிகளில் வீடுகளுக்குள் மழை நீர் தேங்கியுள்ளது. திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரிமருத்துவமனையில் தண்ணீர் புகுந்ததால் நோயாளிகள் பாதிக்கப்பட்டனர்.

இதேபோல் மனகாவலம்பிள்ளை நகர், பேட்டை, மேலப்பாளையம் பகுதிகளில் உள்ள வீடுகளைவெள்ளம் சூழ்ந்தது. அம்பாசமுத்திரம் அருகே பொட்டல் கிராமத்தில் கனமழையால் ஊருக்குள் வெள்ளம் புகுந்ததால் மக்கள் வெளியேறி அங்குள்ள திருமண மண்டபத்தில் தஞ்சமடைந்தனர்.

தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கன்னியாகுமரி, திற்பரப்பு உள்ளிட்ட சுற்றுலா மையங்கள் மழையால் முடங்கின. மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. ரப்பர் பால் வெட்டும் தொழில், தேங்காய் வெட்டும் தொழில், கட்டுமான தொழில் உட்பட அனைத்து தொழில்களும் பாதிக்கப்பட்டுள்ளன. நாகர்கோவில் மீனாட்சி கார்டன், வடசேரி புளியடி, பாரைக்கால் மடம் பகுதிகளில் வெள்ளத்தில் மக்கள் சிக்கினர். அஞ்சுகிராமம், செட்டிகுளம் பகுதியில் மழையால் சாலைகள் ஆறுபோல் காட்சியளித்தன. நாகர்கோவில், சுசீந்திரம், மணக்குடியில் பழையாற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் நாகர்கோவில், கன்னியாகுமரி, திருவனந்தபுரம் சாலைகளிலும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி உள்ளிட்ட அணைகளில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்திலும் பெய்து வரும் கனமழை காரணமாக இடுப்பளவுக்கு மேல் தண்ணீர் சென்றதால் மக்கள் வெளியே வரமுடியாமல் முடங்கினர். கடைகள், வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. சாத்தான்குளம் அண்ணாநகர் பகுதியில் வீடுகளை மழைநீர் சூழ்ந்ததால், அந்த பகுதியில் வசித்த 20 பேர் வெளியேற்றப்பட்டு, தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். பேய்க்குளம், கருங்கடல், அரசூர், பழனியப்பபுரம், பண்ணம்பாறை, தட்டார்மடம் உள்ளிட்ட அனைத்து கிராமங்களிலும் மழைநீர் சூழ்ந்துள்ளதால் மக்கள் வெளியே வரமுடியாமல் முடங்கியுள்ளனர். ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூரிலும் தெருக்கள், சாலைகள் வெள்ளக்காடாயின. வைகுண்டம், ஆழ்வார்திருநகரி, வல்லநாடு உள்ளிட்ட பகுதிகளில் பிசான சாகுபடிக்காக தயார் செய்யப்பட்டிருந்த பல ஏக்கர் நாற்றங்கால்கள் தண்ணீரில் மூழ்கின. தொடர் மழையால் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். சூறாவளி காற்றால் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்ததால் வீடுகள் சேதம் அடைந்துள்ளன. மேலும் மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் அதீத கனமழை ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மழை வெள்ளத்தால் தலைநகரமான சென்னை மூழ்கிய நிலையில், மக்களை பாதுகாக்க வேண்டிய அமைச்சர்கள் யாரும் களத்தில் இல்லாததால்  திமுக அரசு மீது மக்கள் மிகப்பெரிய அதிருப்தியில் உள்ளனர். வாக்களித்த மக்களை காப்பாற்ற மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தென் தமிழகத்தில் ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் செயல்பட வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.