1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: வியாழன், 22 பிப்ரவரி 2024 (09:32 IST)

சொத்து வெறி! வயதான தந்தையை நாய் சங்கிலியில் கட்டுப்போட்டு கொடுமை செய்த மகள்!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பெரியார் நகர் 5ஆம் வீதியில் வசித்து வந்தவர்கள் சௌந்தரராஜன் - கல்யாணி தம்பதியினர். சௌந்தரராஜன் பிளம்பிங் மற்றும் எலக்ட்ரிகல் காண்ட்ராக்ட் எடுத்து ஆட்களை வைத்து வேலை செய்து வந்துள்ளார்.


 
அவரது மனைவி கல்யாணி பள்ளிக்கூடத்தில் சத்துணவு அமைப்பாளராக இருந்து வந்துள்ளார். இந்நிலையில் இவர்களுக்கு ராஜி என்ற ஒரே பெண் குழந்தை பிறந்துள்ளது.

ராஜி ஒற்றை பிள்ளையாக செல்லமாக வளர்த்து கடுமையான உழைப்பில் படிக்க வைத்து 2008இல் பள்ளத்தூர் ராஜேஸ்வரன் என்பவரின் மகன் சக்கரவர்த்திக்கு ஆடம்பரமாக சகல வசதிகளும் செய்து கொடுத்து திருமணம் செய்து வைத்துள்ளார். தற்போது இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தை உள்ளது.

சௌந்தரராஜன் மகள் ராஜி, காரைக்குடி அரசு பள்ளியில் ஆசிரியராக அரசு பணி செய்து வருகிறார். இந்நிலையில் சௌந்தரராஜனின் மனைவி கல்யாணி 10 வருடங்களுக்கு முன்பு இறந்ததால் 73 வயதாகும் சௌந்தரராஜன் தனியாக சமைத்து வேலை செய்து தன்னுடைய வாழ்க்கையை நகர்த்தி வந்துள்ளார்.

அரசு வேலை செய்யும் தனது மகள் எந்த உதவியும் தனது தந்தைக்கு செய்யாமல் தந்தையிடம் இருந்த பணங்கள் மற்றும் சொத்துக்களை கொஞ்சம் கொஞ்சமாக கேட்டு வாங்கி வந்துள்ளார்.

இந்நிலையில் மகள் ராஜிக்கு உமது தந்தை சம்பாதிப்பது எல்லாம் ஆங்காங்கே ஊதாரித்தனமாக செலவு செய்து வருகிறார் என்று யாரோ தகவல் கொடுத்ததின் பேரில்.கடந்த வருடம் டிசம்பர் மாதம் .மகள் ராஜி மற்றும் ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற அவரது கணவர் சக்கரவர்த்தி மற்றும் சக்கரவர்த்தியின் தம்பி பல்லவன் ராஜியின் மாமனார் ராஜேஸ்வரன் ஆகியோர் காரில் வந்து காரைக்குடியில் சௌந்தரராஜன் வீட்டில் தங்கி இருந்த போது அவரது கை மற்றும் கால்களை கட்டி சத்தம் போடாமல் அவரது வாயை பிளாஸ்டர் போட்டு ஒட்டியும் காருக்குள் வைத்து காரைக்குடியில் அருகாமையில் உள்ள ராஜி வீடு அமைந்துள்ள பள்ளத்தூருக்கு கடத்தி சென்று அவர்களது மேல் மாடியில் கட்டிலில் படுக்க போட்டு கட்டி வைத்துள்ளார்கள்.

அவசர தேவைக்கு கூட அவிழ்த்து விடாமல் இயற்கை உபாதைகளை கட்டிலிலே கழித்து வந்துள்ளார்.

அவ்வப்போது திடீர் திடீர் என வந்து அடித்து உன்னுடைய பணம் எல்லாம் யாருடன் கொடுத்து வைத்துள்ளாய்? உன்னுடைய சொத்துக்களை எங்களது பெயருக்கு மாற்றிக் கொடு என அடித்து சித்திரவதை செய்ததாக சௌந்தர்ராஜன் தெரிவித்தார்.

இந்நிலையில் தொடர்ந்து ஒரு மாதத்திற்கு மேலாக அவர் கட்டப்பட்டிருந்ததால் கை மற்றும் கால்களில் புண் ஏற்பட்டு அழுகிய நிலையில் வரவும் கட்டுக்களை அவிழ்த்து விட்டு உள்ளனர்.

அரை நிர்வாணமாக அறை உள்ளே இருந்த சௌந்தரராஜன் முதல் மாடியில் ஜன்னல் வழியாக இருந்த தண்ணீர் பைப்பில் தொற்றிக்கொண்டு இரவில் வெளியே வந்துள்ளார்.

சௌந்தரராஜன் வீடு காரைக்குடியில் ரயில்வே ரோட்டின் அருகிலே இருப்பதால் பள்ளத்தூரில் இருந்து தப்பித்து வந்து ரயில் ரோடு வழியாக காரைக்குடியில் இருக்கும் தனது வீட்டுப் பகுதிக்கு விடியற்காலையில் வந்து சேர்ந்துள்ளார்.

அப்போது எதார்த்தமாக பார்த்த சௌந்தரராஜன் நண்பர் வீரசேகரன் சௌந்தரராஜனின் அரை நிர்வாண கோலத்தையும் கை கால்களில் கட்டப்பட்டிருந்த போது ஏற்பட்ட புண்களையும் கண்டு அதிர்ந்து போனார்.

உடனடியாக சவுந்தரராஜனுக்கு உடை கொடுத்து உணவு கொடுத்து அவரது வீட்டிலே வீரசேகர் தங்க வைத்துள்ளார்.

நடந்ததெல்லாம் சௌந்தராஜன் வீரசேகரிடம் கூறியதைக் கண்டு அதிர்ந்து போன வீர சேகர் காவல் நிலையத்தில்  12.02.2024 அன்று புகார் கொடுத்துள்ளார்.

இது சம்பந்தமாக சௌந்தரராஜன் மகள் மற்றும் அவரது கணவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.  ஒரு வார காலம் ஆகியும் போலீசார் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை என சௌந்தரராஜன் தெரிவித்தார்.

ஒரே பெண் குழந்தையாக செல்லமாக வளர்த்த மகள் சொத்திற்காக தனது தந்தையை நாய் சங்கிலியில் கட்டி போட்டு சித்தரவதை செய்த சம்பவம் அனைவரின் நெஞ்சை பதபத வைக்கும் செயலாக உள்ளது.