1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வியாழன், 25 ஜனவரி 2024 (17:39 IST)

முதல்வர் தனது ஆட்சியின் தோல்வியை ஒப்புக் கொண்டு தான் ஆகவேண்டும்- வானதி சீனிவாசன்

நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சி நிறுவனத்தில் 7 ஆண்டுகளாக திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகா செய்தியாளராக பணியாற்றி வரும் நேசபிரபு மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியதில், அவர் படுகாயங்களுடன் தனியார் மருத்துவமனையில், தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். 'இந்தக் கொலைவெறித்தாக்குதல் நடத்திய குற்றவாளிகளை பிடிக்க 4 தனிப்படை அமைத்து தேடி வருவதாக' திருப்பூர் மாவட்ட கண்காணிப்பாளார் சாமிநாதன் தெரிவித்திருந்தார்.

இந்த சம்பவம் பற்றி பாஜக நிர்வாகி வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளதாவது:

''நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சி நிறுவனத்தில் 7 ஆண்டுகளாக திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகா செய்தியாளராக பணியாற்றி வரும் நேசபிரபு அவர்கள் மீது சமூக விரோதிகள் கொலை வெறி தாக்குதல் நடத்தியிருக்கும் செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன். தன்னை நோட்டம் விடும் மர்ம நபர்கள் குறித்து காவல்துறைக்கு நேசபிரபு தகவல் தெரிவித்துள்ளார்.

தனக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினரிடம் கூறிய நேசபிரபுவிடம், நேரில் வந்து புகார் அளிக்கும்படியும், போதிய காவலர்கள் இல்லை என்று அலட்சியம் கட்டிய காவல்துறையின் செயல் கண்டிக்கத்தக்கது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்துவிட்டதையே இந்த கொடூர சம்பவம் காட்டுகிறது.

ஜனநாயகத்தின் நான்காவது தூனான பத்திரிக்கையாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை எனும்போது காவல்துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கக் கூடிய முதல்வர் தனது ஆட்சியின் தோல்வியை ஒப்புக் கொண்டு தான் ஆகவேண்டும். மீண்டும் இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க குற்றவாளிகளை கண்டுபிடித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுகொள்கிறேன். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திரு.நேச பிரபு பூரண நலம்பெற்று தனது சமுதாய கடமையை ஆற்ற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.