வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sasikala
Last Updated : புதன், 14 டிசம்பர் 2016 (13:17 IST)

எரிப்பதை விட்டு புதைப்பதா? ஜெயலலிதாவுக்கு மீண்டும் இறுதிச் சடங்கு செய்த உறவினர்கள்!

முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைபாடு காரணமாக கடந்த 5ம் தேதி மரணம் அடைந்தார். அதைத் தொடர்ந்து மெரினா கடற்கரையில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.


ஜெயலலிதாவின் உடலுக்கு அவரது தோழி சசிகலா, ஜெயலலிதாவின் சகோதரர் மகன் இறுதிச்சடங்குகளை செய்தனர். ஜெயலலிதாவின் உடல் அவர்கள் குல வழக்கப்படி தகனம் செய்யப்படாமல், அடக்கம் செய்யப்பட்ட விஷயம் அப்போதே பல்வேறு தரப்பினரால் விமர்சனம் செய்யப்பட்டது.
 
இந்நிலையில், மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா மோட்சம் பெற வேண்டி அவரது உறவினர்கள் இறுதிச் சடங்குகளை, ஸ்ரீரங்கம் காவேரி கரையோரத்தில் மீண்டும் செய்தனர். மூத்த பூசாரி ரங்கநாத் ஐயங்கார், பொம்மை ஒன்றை ஜெயலலிதா போல பாவித்து தகனம் செய்து இறுதிச் சடங்குகளை மேற்கொண்டார். இந்த சடங்குகளுக்கு ஜெயலலிதாவின் உறவினர் வரதராஜு தலைமையேற்று நடத்தி வைத்தார்.
 
இந்நிலையில் அவர், ஜெயலலிதாவின் உடல் தகனம் செய்யப்படாமல் அடக்கம் செய்யப்பட்டது ஏன்? எனவும், சென்னையில் நடைபெற்ற இறுதிச் சடங்குகளின் போது எங்களை ஏன் கலந்து கொள்ள அனுமதிக்கவில்லை எனவும் அவர் கேள்வி எழுப்பினார். மேலும் இதில் கலந்து கொண்ட அவரது உறவினர்களும் தங்களது அதிருப்தியை தெரிவித்தனர்.