1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: வியாழன், 26 பிப்ரவரி 2015 (11:27 IST)

நெல்லையில் ஆட்டோ டிரைவர் வெட்டிக் கொலை: பட்டப்பகலில் பயங்கரம்

நெல்லையில் பட்டப்பகலில் ஆட்டோ டிரைவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த அவருடைய உறவினர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினார்கள். பேருந்துகள் மீது கல்வீசி தாக்கப்பட்டது. ஆட்டோ எரிக்கப்பட்டது.
 
நெல்லை தச்சநல்லூர் தேனீர்குளத்தை சேர்ந்தவர், பொன்னையா (வயது 24). ஆட்டோ டிரைவர். நேற்று காலை தச்சநல்லூர் பகுதிகளை சேர்ந்த மாணவ-மாணவிகளை ஆட்டோவில் அழைத்துக் கொண்டு பாளையங்கோட்டையில் உள்ள பள்ளிக்கூடத்தில் இறக்கி விட்டார். பின்னர் வண்ணார்பேட்டை மேம்பால ரவுண்டானாவை கடந்து வடக்கு பைபாஸ் ரோட்டில் சென்று கொண்டிருந்தார்.
 
அப்போது ஒரு கும்பல் ஆட்டோவை வழிமறித்தது. அந்த கும்பலில் சிலர் கைகளில் வைத்திருந்த அரிவாள்களால் பொன்னையாவை வெட்ட முயற்சி செய்தனர்.
 
அதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த பொன்னையா ஆட்டோவை விட்டு கீழே இறங்கி உயிர் பிழைப்பதற்காக ஓடினார். ஆனால் அந்த கும்பல் அவரை ஓடஓட விரட்டி சரமாரியாக வெட்டியது. பொன்னையாவுக்கு கழுத்து மற்றும் கையில் பலத்த வெட்டுகள் விழுந்தன. இதில் பொன்னையா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்.
 
பொன்னையா ஓட்டி வந்த ஆட்டோவை, அந்த கும்பலை சேர்ந்தவர்கள் கீழே கவிழ்த்து போட்டுவிட்டு, தங்களது மோட்டார் சைக்கிள்களில் ஏறி தப்பி விட்டார்கள். இதுபற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
 
பொன்னையாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
 
இதற்கிடையே ஆட்டோ டிரைவர் பொன்னையா கொலை செய்யப்பட்ட தகவல் தச்சநல்லூர் பகுதியில் பரவியது. பொன்னையாவின் உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் ஆத்திரம் அடைந்தனர். கொலையாளிகள் மற்றும் அவர்களுடைய ஆதரவாளர்களின் வீட்டில் உள்ள பொருட்களை அடித்து நொறுக்கி சூறையாடினார்கள். அந்த பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு ஆட்டோ தீவைத்து கொளுத்தப்பட்டது.
 
தச்சநல்லூர் சந்திமறித்தம்மன் கோவில் முன்பு மெயின் ரோட்டுக்கு திரண்டு வந்து சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். அப்போது அந்த வழியாக வந்து கொண்டிருந்த 3 அரசு பேருந்துகள் கல்வீசி தாக்கப்பட்டன. இதில் பேருந்துகளின் கண்ணாடிகள் உடைந்து சேதம் அடைந்தன. மேலும் அந்த வழியாக வந்த ஒரு லாரி மீதும் கல்வீசி கண்ணாடி உடைக்கப்பட்டது. இதைக்கண்ட காவல்துறையினர், மறியலில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.
 
காவல்துறையினர் நடத்திய முதல் கட்ட விசாரணையில் ஆட்டோ ஸ்டாண்டு பிரச்சனையால் பொன்னையா கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இது தொடர்பாக பாளையங்கோட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.