வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : புதன், 24 ஜூலை 2024 (15:57 IST)

திமுக ஆட்சியின் அவலங்களை மக்களிடம் சொல்லுங்கள்.! நிர்வாகிகளுக்கு இபிஎஸ் அறிவுறுத்தல்..!!

Edapadi
திமுக ஆட்சியின் அவலங்களை மக்களிடம் கொண்டு சேருங்கள் என்றும் அதிமுகவின் சாதனைகளை மக்களிடம் கொண்டு போய் சேர்த்தாலே 2026-ல் அதிமுக ஆட்சி அமைக்க முடியும் என்றும் கட்சி நிர்வாகிகளுக்கு அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.
 
மக்களவை தேர்தல் தோல்வி குறித்து தொகுதி வாரியாக கட்சி நிர்வாகிகளிடம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிஆலோசனை நடத்தி வருகிறார். அதில் முதல் கட்டமாக 23 மக்களவைத் தொகுதி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். 
 
மீதமுள்ள தொகுதி நிர்வாகிகளுடன் 2-ம் கட்டமாக, எடப்பாடி பழனிச்சாமி இன்று ஆலோசனையை தொடங்கினார். இதில் தேனி மற்றும் ஆரணி மக்களவை தொகுதிகளைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் வேட்பாளர்கள் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். 
 
கூட்டத்தில் பேசிய எடப்பாடி, அதிமுகவின் சாதனைகளை மக்களிடம் கொண்டு போய் சேர்த்தாலே 2026-ல் அதிமுக ஆட்சி அமைக்க முடியும் என்று நம்பிக்கை தெரிவித்தார். 2026 தேர்தலில் அதிமுக ஆட்சி அமைப்பதற்கான அனைத்து பணிகளையும் தொகுதிகளில் நிர்வாகிகள் செய்ய வேண்டும் என்றும் மாவட்டச் செயலாளர்கள் ஒன்றிய அளவில், கிளை அளவில் தொண்டர்களை சந்தித்து அடிக்கடி கூட்டங்கள் நடத்த வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

 
திமுக அரசின் சட்டம், ஒழுங்கு சீர்கேடு, மின் கட்டண உயர்வு, மற்றும் வரிகள் உயர்த்தியது குறித்து மக்களிடம் எடுத்துக் கூறி மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்  என்று எடப்பாடி பழனிச்சாமி கேட்டுக்கொண்டார்.