1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 24 ஜூன் 2019 (14:13 IST)

மூன்று ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தல் இழுபறி – தமிழகத்துக்கு ரூ 10000 கோடி இழப்பு !

தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக உள்ளாட்சிப் பொறுப்புகளுக்கானத் தேர்தல் நடத்தப்படாமல் உள்ளது.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்களின் பதவிக்காலம் முடிந்து கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் ஆகின்றன. ஆனால் இன்னும் தேர்தல் நடத்தாமல் தமிழக அரசு காலம் தாழ்த்தி வருகிறது.  இதனால் உள்ளாட்சிப் பணிகள் நடக்காமல் முடங்கியுள்ளன. இது குறித்த வழக்கு ஒன்றின் விசாரணையின் போது ‘தமிழகத்தில் உரிய நேரத்தில் தேர்தல் நடத்தப்படாததற்கு நிலுவையில் உள்ள வழக்குகளேக் காரணம். மேலும் வார்டு மறுவரையறை வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு எனப் பணிகள் முடியாமல் இருப்பதும் தேர்தல் நடத்துவதில் பிரச்சனையாக உள்ளன. . எனவே தற்போது தேர்தல் நடத்தும் சூழல் தமிழகத்தில் இல்லை. வாக்காளர் பட்டியலை சரிப்பார்த்த பின்னரே தேர்தல் நடத்தப்படும்’ எனத் தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இன்னமும் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்புகள் எதையும் அரசு அறிவிக்கவில்லை.

ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க செயற்குழுக் கூட்டம் நேற்று சிவகங்கையில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட மாநிலத்தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கிப் பேசினார். அப்போது அவர் ‘ தமிழகத்தில் திட்டமிட்டப்படி உள்ளாட்சித் தேர்தல்கள் நடக்காததால் தமிழகத்துக்கு வரவேண்டிய ரூபாய் 10000 கோடி ரூபாய் மத்திய அரசிடம் இருந்து வரவில்லை. இதனால் உள்ளாட்சி அமைப்புகள் கடுமையான நிதி நெருக்கடியில் உள்ளன’ என தெரிவித்துள்ளார்.