லஞ்சம் வாங்குவதில் 6-வது இடத்தில் தமிழகம்! – அதிர்ச்சி ரிப்போர்ட்!
இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களில் அதிக லஞ்சம் வாங்கும் மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் 6-வது இடத்தில் உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தனியார் அமைப்பு ஒன்று இந்தியாவில் உள்ள 20 மாநிலங்களில் லஞ்சம் குறித்த ஆய்வை மேற்கொண்டுள்ளது. அவற்றில் அதிகம் லஞ்சம் வாங்கும் மாநிலத்தில் ராஜஸ்தான் முதலிடத்தில் உள்ளது.
இந்த பட்டியலில் ஆறாவது இடத்தில் தமிழகம் உள்ளது. தமிழகத்தில் 100ல் 62 பேர் தங்களது வேலை முடிய வேண்டும் என்பதற்காக லஞ்சம் அளிப்பதாக கூறப்படுகிறது. நிலம் வாங்குதல், விற்றல், நகராட்சி நிர்வாக பணிகள், அரசாங்க சார்ந்த சான்றிதழ்கள் வாங்குதல் போன்ற பல காரியங்களுக்கும் லஞ்சம் பெறுவதாக கூறப்படுகிறது. மேலும் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு லஞ்சம் வாங்குவது அதிகரித்துள்ளதாகவும் அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
இவை மட்டுமல்லாமல் அரசின் உதவி திட்டங்கள் போன்றவற்றை பெறவே குறிப்பிட்ட அதிகாரிகளுக்கு லஞ்சம் அளிக்க வேண்டியிருப்பதாக அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.
லஞ்ச ஒழிப்பு துறை மாநிலங்கள் முழுவதும் இருந்தாலும் சிறிய தொகை அளவில் நடைபெறும் லஞ்ச ஊழல்கள் குறித்து யாரும் புகார் அளிக்க முன்வராததே இதற்கு காரணம் என சமூக ஆர்வலர்கள் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளனர்.