சேடிஸ்ட் மோடி ;சேடஸ்ட் ஸ்டாலின் – திமுக பாஜக, மோதல்
பிரதமர் மோடியை சேடிஸ்ட் என்று திரும்ப திரும்ப அழைத்து வரும் திமுக தலைவர் ஸ்டாலின் இனிமேல் சேடஸ்ட் ஸ்டாலின் என்று அழைக்கப்படுவார் என தமிழிசை சவுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.
கலைஞர் சிலை திறப்பு விழாவில் பேசிய ஸ்டாலின் ‘பிரதமர் மோடி, கஜா புயல் பாதித்த பகுதிகளைப் பார்வையிட இன்னும் வரவில்லை, புயலில் இறந்தவர்களுக்கும் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கும் ஒரு இரங்கல் கூட தெரிவிக்கவில்லை. ஆனால் வட மாநிலங்களில் ஒரு பிரச்சனையென்றால் உடனே சென்று பார்வையிடுகிறார்’ என்று கூறி மோடியை ஒரு சேடிஸ்ட் என விமர்சித்தார்.
மோடியை சேடிஸ்ட் என்றழைத்ததற்கு தமிழக பாஜகவினர் கடுமையான எதிர்ப்பினைத் தெரிவித்தனர். அதற்கு விளக்கமளித்த ஸ்டாலின் ’நான் தனிப்பட்ட முறையில் விமர்சிக்கவில்லை என்றும் நாட்டின் பிரதமர் என்ற முறையிலேயே விமர்சித்தேன் எனக் கூறினார். மேலும் மோடியை சேடிஸ்ட் என்று கூறியதில் உறுதியாக இருப்பதாகவும் கூறினார். ஒரு முறையல்ல 100 முறை சொல்வேன் மோடி ஒரு சேடிஸ்ட்’ எனக் கூறியுள்ளார்.
இதற்குப் பதிலளிக்கும் விதமாக நேற்று சென்னையில் பாஜக வாக்குச்சாவடி முகாமில் பேசிய தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர் ராஜன் ’மோடி, கஜா புயலால் இறந்த மக்களின் குடும்பத்தோடு நான் இருக்கிறேன்.மேலும் தமிழக மக்களுக்கு வேண்டிய உதவிகளை மத்திய அரசு செய்யும் என அறிவித்துள்ளார். இதையெல்லாம் மறைத்து விட்டு ஸ்டாலின் தொடர்ந்து மோடியை அவமதிக்கும் வகையில் சேடிஸ்ட் என அழைத்து வருகிறார். ஆனால் அதே மேடையில் பல்லாயிரக்கணக்கான இலங்கைத் தமிழர்களைக் கொன்று குவித்த சேடிஸ்ட் மனப்பாண்மைக் கொண்ட சோனியாவுக்கு மரியாதை செய்கிறார். அதனால் அவர் இனி சேடஸ்ட் ஸ்டாலின் என்று அழைக்கப்படுவார்’ எனப் பதிலடி கொடுத்துள்ளார்.