வறட்சியை சமாளிக்க 1000 கோடி தேவை:மத்திய அரசுக்கு ஓ.பி.எஸ். வலியுறுத்தல்
தமிழ்நாட்டில் வறட்சியை சமாளிக்க ரூ.1000 கோடி தேவை என்று மத்திய அரசுக்கு, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கோரிக்கை வைத்துள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த இரண்டு மாதங்களாக தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. தண்ணீர் பற்றாக்குறையால் தமிழகத்தில் பல பள்ளிகளும், கல்லூரிகளும், விடுதிகளும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
இந்நிலையில் இன்று டெல்லியில் நடைபெற்ற மத்திய நிதி அமைச்சர்கள் கூட்டத்தில் தமிழகத்தின் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், தமிழகத்தில் நிலவும் குடிநீர் பிரச்சனையை சமாளிக்க ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யவேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
மேலும் அவர் கல்லணை கால்வாயை நவீனப் படுத்தும் திட்டத்திற்கு போதிய நிதியை ஒதுக்கவேண்டும் என்றும், கோதாவரி-காவிரி இணைப்பு திட்டத்திற்கும் போதிய நிதி ஒதுக்கப்பட வேண்டும் எனவும் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.
இதனை தொடர்ந்து துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், கஜா புயல் நிவாரண நிதியாக மத்திய அரசு, தமிழக அரசுக்கு ரூ.6000 கோடி வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாட்டின் தண்ணீர் பிரச்சனை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டிருக்கும் நிலையில் அதி விரைவில் நடவடிக்கை எடுக்கப்பட்டால் தான், இந்த பிரச்சனையை சமாளிக்க முடியும் என்று சமூக ஆர்வலர்கள் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.