1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 17 அக்டோபர் 2023 (12:05 IST)

தன்பாலின திருமணம் விவகாரம்: உச்சநீதிமன்ற நீதிபதிகளின் மாறுபட்ட தீர்ப்புகள்..!

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு தன்பாலின திருமணம் விவகாரத்தில் மாறுபட்ட தீர்ப்புகள் வழங்கியுள்ளது. தலைமை நீதிபதி சந்திரசூட் தனது தீர்ப்பு, ‘நீதிமன்றத்தால் ஒரு சட்டத்தை உருவாக்க முடியாது, 
சட்டத்தின் சரத்துகளை கையாள மட்டுமே நீதிமன்றத்தால் முடியும்.
 
200 ஆண்டுக்கு முன்பு முன்னோர்களால் ஏற்றுக்கொள்ள முடியாத பல காரியங்கள், தற்போது ஏற்க கூடியதாக மாறியுள்ளது. தன் பாலின உறவு நகர்ப்புறத்தை சார்ந்தவர்களிடம் தான் உள்ளது என்ற மத்திய அரசின் கருத்து ஏற்புடையதல்ல, திருமண விவகாரத்தில் புதிய சட்டத்தை உருவாக்க நாடாளுமன்றம், சட்டமன்றத்துக்கு தான் அதிகாரம் உள்ளது. சிறப்பு திருமண சட்டத்தை அரசியல் சாசனத்திற்கு எதிரானதாக கருதினால் முற்போக்கான சட்டத்தை இழக்க நேரிடும்
 
தன்பாலின ஈர்ப்பாளர்கள் எந்த வகையிலும் பாகுபாட்டுடன் நடத்தப்படக்கூடாது என்பதை மத்திய, மாநில அரசுகள் உறுதிப்படுத்த வேண்டும். அவர்களுக்கான சிறப்பு அவசரகால எண் ஏற்படுத்தப்பட வேண்டும் அவர்கள் யாருடன் சேர்ந்து வாழ வேண்டும் என்பது குறித்து முடிவெடுக்க அவர்களுக்கு முழு சுதந்திரம் உள்ளது. தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கு கட்டாய ஹார்மோன் சிகிச்சை அளிக்கக்கூடாது. தன்பாலின ஜோடிகளின் தத்தெடுப்பு விவகாரத்தில் பாகுபாடு காட்டப்படவில்லை என்பதை மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும்’ என்று தனது தீர்ப்பில் தெரிவித்தார்.
 
மேலும் 2வது நீதிபதி சஞ்சய் கிருஷ்ணன் கவுல்  தனது தீர்ப்பில், ‘தன்பாலின ஈர்ப்பாளர்கள் திருமணம் தொடர்பான தலைமை நீதிபதியின் தீர்ப்புடன் ஒத்துப்போகிறேன், தன்பாலின இணை என்பதற்காக அவர்களை பாகுபாட்டுடன் நடத்தக்கூடாது, பிற குடிமக்களுக்கு உள்ளது போல இவர்களுக்கான உரிமை கிடைக்க வேண்டும், வழக்கமான திருமண முறை மற்றும் தன்பாலின திருமண முறை ஆகியவற்றை ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாக பார்க்க வேண்டும். பல ஆண்டுகளாக தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை சரி செய்ய இதுவே சரியான தருணம்’ என்று தீர்ப்பளித்தார்.
 
மற்ற 3 நீதிபதிகள் தங்களது தீர்ப்பை இன்னும் சில நிமிடங்களில் வாசிக்கவுள்ளனர்.
 
Edited by Mahendran