1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 19 மார்ச் 2018 (19:45 IST)

மூளைச்சாவு அடைந்தாலும் 6 பேரை காப்பாற்றிய மாணவர் ; தந்தை கண்ணீர் பேட்டி(வீடியோ)

கரூரில் வாகன விபத்தில் காயமடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சையின்போது மூளைச்சாவு அடைந்த பிளஸ் 2 மாணவரின் உடல் உறுப்புகள் குடும்பத்தினரின் சம்மதத்துடன் ஞாயிற்றுக்கிழமை தானமாகப் பெறப்பட்டன.

 
கரூர் மாவட்டம் தான்தோன்றிமலை வெங்கடேஸ்வரா நகரைச் சேர்ந்த பாலகிருஷ்ணன்- சாந்தி தம்பதியரின் மகன் கோபிநாத் (17). அப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த கோபிநாத், தற்போது பொதுத் தேர்வு எழுதி வந்தார்.     
 
இந்நிலையில், இவர் கடந்த 16-ஆம் தேதி தனது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த கார், இரு சக்கர வாகனத்தின் மீது மோதியதில்,  வாகனத்தின் பின்னால் அமர்ந்து சென்ற கோபிநாத் பலத்த காயத்துடன்,  கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.  பின்னர், மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார். கோபிநாத்துக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்ட போதும்,  அவர் மூளைச்சாவு அடைந்தார். 
 
இதையடுத்து மாணவரின் பெற்றோரிடம் உடல் உறுப்பு தானம் குறித்தும்,  கோபிநாத்தின் உறுப்புகளை தானமாக வழங்குவதன் மூலம் 6 நோயாளிகளுக்கு வாழ்வளிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டது. பின்னர், கோபிநாத்தின் உடல் உறுப்புகளை தானமாக வழங்க பெற்றோர் ஒப்புக்கொண்டனர்.  அரசு மருத்துவமனை டீன் மருதுபாண்டியன் ஆலோசனையின்பேரில், மயக்கவியல் துறைத் தலைவர் மகேஸ்வரி ஒருங்கிணைப்பாளர் கல்யாணசுந்தரம் ஆகியோர் தலைமையில் அமைக்கப்பட்ட மருத்துவக் குழுவினர் அறுவைச் சிகிச்சை மூலம் கோபிநாத்தின் உடல் உறுப்புகளை அகற்றினர். 
 
இவரது ஒரு சிறுநீரகம்,  இரு கண்கள் மதுரை அரசு மருத்துவமனைக்கும்,  மற்றொரு சிறுநீரகம்  திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கும்,  கல்லீரல் மதுரை தனியார் மருத்துவமனைக்கும்,  நுரையீரல்,  இருதயம் ஆகியன சென்னை தனியார் மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டன. இச்சம்பவம் அனைவரின் மனதை உருக்கும் வகையில் இருந்தது.
 
பேட்டி : பாலகிருஷ்ணன் – உடல் உறுப்பு தானம் செய்யப்பட்டவரின் தந்தை