ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க பொதுமக்கள் கோரிக்கை
ஸ்டெர்லைட் ஆலையை பழையபடி மீண்டும் திறக்க வேண்டும் என தெற்கு வீரபாண்டியபுரம் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் தூத்துக்குடி ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளனர்.
தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மே 22ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தில் துப்பக்கிச்சூடு நடத்தப்பட்டதில் அப்பாவி பொதுமக்கள் 13 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இதைத்தொடர்ந்து தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைத்தது. ஸ்டெர்லையை நிரந்தரமாக மூடுவதாகவும் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.
இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலைக்கு அருகேயுள்ள தெற்கு வீரபாண்டியபுரம் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் சிலர் நேற்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியிடம் மனு அளித்தனர். அதில் எங்கள் பகுதியில் கடந்த 22 ஆண்டுகளாக இயங்கிய ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளதால் பலர் வேலை இழந்து தவிப்பதாக தெரிவித்தனர்.
மேலும் அவர்களுடன் வந்த லாரி உரிமையாளர்கள், ஆலை மூடப்பட்டதால் எங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளோம் என்றும் வங்கிகளில் வாங்கிய கடன் தவணையை செலுத்த முடியவில்லை என்றும் தெரிவித்தனர் எனவே ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டரிடம் மனு அளித்துவிட்டு சென்றனர்.