ஈஷா அவுட்ரீச் சார்பில் அதிநவீன மண் பரிசோதனை ஆய்வுக்கூடம் திறப்பு! - ஆயிரக்கணக்கான விவசாயிகள் இலவசமாக பயனடைய உள்ளனர்!
கோவை பூலுவப்பட்டியில் ஈஷா அவுட்ரீச் சார்பில் அதிநவீன மண் பரிசோதனை ஆய்வுக்கூடம் இன்று (16/04/24) திறக்கப்பட்டது. இந்த ஆய்வுக் கூடத்தின் மூலம் ஈஷா அவுட்ரீச்சின் வழிகாட்டுதலில் இயங்கும் 25 உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தை சேர்ந்த தோராயமாக 10,000 விவசாய உறுப்பினர்கள் இலவசமாக பயனடைய உள்ளனர்.
விவசாயிகளின் வாழ்வாதாரம் மற்றும் மண்ணின் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் பெரும் பொருட்செலவில் இந்த ஆய்வுக்கூடம் உருவாக்கப்பட்டு உள்ளது. அதிநவீன வசதிகள் மற்றும் கருவிகளுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த மண் பரிசோதனை ஆய்வு கூடத்தின் மூலம் விவசாயிகளின் நிலத்தில் உள்ள மண் பரிசோதனை செய்யப்பட்டு தேவையான பரிந்துரைகள் துல்லியமாக வழங்கப்பட உள்ளது.
இந்த ஆய்வுக்கூடத்தில் பேரூட்ட, நுண்ணூட்ட சத்துக்கள் குறித்து அறியும் முழுமையான தானியங்கி கருவிகள், மண்ணின் அங்கக கரிம அளவை அறியும் கருவிகள் மற்றும் பயிற்சி பெற்ற ஆய்வக தொழிற்நுட்ப வல்லுனர் குழுக்களோடு மிக சிறப்பான வகையில் திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த மண் பரிசோதனை சேவை முதற்கட்டமாக ஈஷா அவுட்ரீச்சின் வழிகாட்டுதலில் இயங்கும் 25 உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தை சேர்ந்த தோராயமாக 10,000 விவசாய உறுப்பினர்களுக்கு இலவசமாக வழங்கப்பட உள்ளது.
இந்த சேவையை பெறும் விவசாயிகளின் நிலத்திற்கு உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தை சார்ந்த பிரதிநிதிகள் நேரடியாக செல்வார்கள். அங்கு நிலத்தின் வெவ்வேறு பகுதிகளில் இருந்து மண் மாதிரிகளை எடுத்து ஆய்வு கூடத்திற்கு அனுப்புவார்கள். பிறகு விவசாயிகளின் நிலத்தில் இருந்து பெறப்பட்ட மண், ஆய்வுக்கூடத்தில் பலகட்ட பரிசோதனைக்கு உட்படுத்தப்படும்.
இந்த பரிசோதனைகளின் மூலம் மண்ணில் உள்ள அங்கக கரிமத்தின் அளவு, பேரூட்ட மற்றும் நுண்ணூட்டச் சத்துகள், மண்ணின் பண்புகள் உள்ளிட்டவை பிரித்து அறியப்படும். இந்த பரிசோதனையின் முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு நிபுணத்துவம் வாய்ந்த வேளாண் வல்லுநர் குழு பயிர் ஆலோசனை மற்றும் உரப் பரிந்துரைகளை வழங்கும். அதுமட்டுமின்றி விவசாயிகளுக்கு தொடர் வழிகாட்டுதல்களும் ஆலோசனைகளும் வழங்கப்படும்.
இந்த இலவச மண் பரிசோதனைகள் மற்றும் பரிந்துரைகள், விவசாயிகள் தங்கள் மண்ணில் உள்ள சத்துக்களின் அளவு மற்றும் மண்ணின் அங்கக வளம் பற்றி அறிந்து கொள்ளவும், பயிர்வாரியான ஊட்டச்சத்து தேவை மற்றும் மண்ணின் தன்மை முதலியவற்றை கருத்தில் கொண்டு உர மேலாண்மை செய்திடவும், பயிரின் உற்பத்தியை அதிகரித்து இலாபத்தை பெருக்கவும், மண் வளத்தை மேம்படுத்தி சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் பெருமளவில் உதவி புரியும்.
மேலும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் செயல்பாடுகளில் ஈடுபடும் 33 "மண் காப்போம்” இருசக்கர வாகனங்களின் பயணம் ஆதியோகி முன்னிலையில் கொடியசைத்து துவக்கி வைக்கப்பட்டது. இவ்வாகனங்கள் தமிழகம் மற்றும் கர்நாடகா முழுவதிலும் சென்று உழவன் உற்பத்தியாளர் நிறுவனங்களின் செயல்பாடுகளை விரிவுபடுத்தி, தொலைதூர கிராமங்கள் மற்றும் பண்ணை நிலங்களுக்கு விரைவாக சென்று சேவையாற்ற முடியும். மேலும் விவசாயிகளை விரைவில் அணுகவும், புதிய சந்தைகளை திறம்பட கண்டறியவும் இந்த வாகனங்கள் உதவும் என்பதால் இது ஒரு முக்கிய முன்னெடுப்பு என்பது குறிப்பிடத்தக்கது.