1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Annakannan
Last Updated : வியாழன், 17 ஜூலை 2014 (11:59 IST)

சி.எஸ்.ஐ. சபையால் மன உளைச்சல் அடைந்து தற்கொலை - ஜெயலலிதா ரூ.3 லட்சம் நிவாரணம்

தன் வீட்டின் ஒரு பகுதியை சி.எஸ்.ஐ. சபை நிருவாகத்தினர் இடித்ததால் மன உளைச்சல் அடைந்து விஷமருந்தித் தற்கொலை செய்துகொண்டவரின் குடும்பத்துக்கு மூன்று லட்சம் ரூபாய் வழங்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
 
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
 
கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரம் வட்டம், ராமபுரம் கிராமம், ஆண்டார்குளம் பகுதியைச் சேர்ந்த திரு. ராஜன் என்பவர் 13.7.2014 அன்று தனது வீட்டின் கழிப்பறை மற்றும் மதில் சுவரை சி.எஸ்.ஐ. சபைக்கு சொந்தமான இடம் எனக் கருதி, சி.எஸ்.ஐ. சபை நிருவாகத்தினர் இடித்து அகற்றியதன் காரணமாக மன உளைச்சல் அடைந்து விஷமருந்தியதால் மயக்கமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி 14.7.2014 அன்று உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன். 
 
இந்த துயரச் சம்பவத்தில் அகால மரணமடைந்த ராஜன் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த ராஜன் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து மூன்று லட்சம் ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். 
 
இவ்வாறு ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.