பேனா நினைவுச் சின்னம் அமைக்க மத்திய அரசு அனுமதி: சீமான் ஆவேசம்..!
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு கடலில் பேனா சிலை வைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ள நிலையில் இதற்கு மத்திய அரசு பதினைந்து நிபந்தனைகளுடன் அனுமதித்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இந்த செய்திக்கு நாம் தமிழர் கட்சியின் சீமான் தனது கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளார். அவர் இது குறித்து கூறியதாவது:
கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்கு விதிகளுக்குப் புறம்பாக ஒன்றிய நிபுணர் குழுவினர் அனுமதி அளித்திருப்பது மக்களாட்சி முறைக்கு எதிரான செயல். சூழலியலுக்கு எதிரான மாநில அரசின் இத்திட்டத்திற்கு ஒன்றிய அரசின் குழு விரைந்து அனுமதி அளித்துள்ளது அவர்களின் ஒருங்கிணைந்த மக்கள் விரோதப் போக்கினைக் காட்டுகிறது.
மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் முறையாக நடைபெறவில்லை என்பதனைக் எடுத்துக் கொள்ளாது அனுமதி வழங்கப்பட்டிருப்பது மக்களின் கருத்தினை ஒன்றிய, மாநில அரசுகள் துளியும் மதிப்பதில்லை என்பதனை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. மக்கள் விரோத - சூழலியல் விரோத இத்திட்டத்தினை எதிர்த்து அடுத்ததாக நாம் தமிழர் கட்சி சட்டப் போராட்டம் முன்னெடுக்க உள்ளது என்று அறிவிக்கிறேன்.
Edited by Mahendran