வியாழன், 27 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 27 பிப்ரவரி 2025 (10:02 IST)

நாம் தமிழருக்கு த.வெ.கவால் ஏற்படும் நெருக்கடி!? சீமானின் அடுத்த கட்ட ப்ளான்!

Vijay Vs Seeman

நாம் தமிழர் கட்சியிலிருந்து பலரும் விலகி வரும் நிலையில் கட்சியை வலுப்படுத்த விரைவில் ஒரு சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள தயாராகி வருகிறார் சீமான்.

 

உள்ளாட்சி, சட்டமன்றம், நாடாளுமன்றம் என எத்தனை தேர்தல்கள் வந்தாலும் தனித்தே நின்று போட்டியிடும் கட்சி நாம் தமிழர். தமிழ் தேசியக் கொள்கையை அடிப்படையாக கொண்ட நாம் தமிழர் கட்சி ஒவ்வொரு தேர்தலிலும் தனது வாக்கு வங்கியை அதிகரித்துக் கொண்டே சென்று கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 8 சதவீத வாக்குகளை பெற்று பல தொகுதிகளில் மூன்றாவது பெரிய கட்சியாக இருந்தது. சமீபத்தில் தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தையும் பெற்றது.

 

ஆனால் சமீபகாலமாக நாம் தமிழர் கட்சியின் முக்கிய பொறுப்பில் இருப்பவர்கள் அடுத்தடுத்து பதவி விலகி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீமானின் சர்வாதிகார செயல்பாடுகளும், கட்சியில் உள்ள சாதிய பிரச்சினைகளும் தாங்கள் விலக காரணம் என நிர்வாகிகள் கூறுகின்றனர். ஆனால் யாரையும் இருக்க சொல்லி கட்டாயப்படுத்தவில்லை, இது கட்சியில் களையெடுக்கும் நேரம் என்கிறார் சீமான்.

 

எப்படி இருந்தாலும், கட்சியிலிருந்து விலகும் நிர்வாகிகள் தங்களுடன் தங்கள் ஆதரவாளர்கள் என ஒரு குறிப்பிட்ட அளவிலான நாம் தமிழர் தொண்டர்களையும் கொண்டு சென்றுவிடுகின்றனர். 

 

வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக, பாஜக, அதிமுக என மூன்று கட்சிகள் தலைமையில் கூட்டணிகள் அமைந்து தேர்தல் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே விஜய்யின் தவெக கட்சியும் உள்ளே வந்துள்ளதால், தவெகவுடன் சில கட்சிகள் கூட்டணி அமைக்கும் வாய்ப்பும் உள்ளது. கிட்டத்தட்ட 4 கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தேர்தலாக மாற உள்ள 2026 சட்டமன்ற தேர்தல் நாம் தமிழர் கட்சி வழக்கம்போல தனியாளாக போட்டியிட்டு 8 சதவீத வாக்கை தக்க வைக்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

 

இல்லாவிட்டால் நாம் தமிழர் வாக்கு வங்கிக்கு நிகரான வாக்குகளை தவெக பெறும் வாய்ப்பும் உள்ளது. இதனால் வரும் சட்டமன்ற தேர்தல் நாதகவுக்கு சிக்கலான தேர்தலாக இருக்கும் என பார்க்கப்படுகிறது. தொடர்ந்து நாதகவிலிருந்து விலகுபவர்கள் திமுக, தவெகவில் அதிகளவில் சேர்ந்து வருகின்றனர்.

 

இந்நிலையில் இந்த ஒன்றரை ஆண்டுகளுக்குள் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கட்சியை பலப்படுத்த திட்டமிட்டுள்ளாராம் சீமான். ஏற்கனவே முதல் கட்ட சுற்றுப்பயணம் செய்தவர், இரண்டாம் கட்ட சுற்றுப்பயணத்தின் வியூகங்களை மாற்றி வருகிறாராம். முக்கியமாக இளைஞர்களை அதிக அளவில் நாம் தமிழர் கட்சியின் பக்கம் ஈர்க்கும் அளவில் அவர்களை மையப்படுத்தியே சீமானின் பேச்சுகள் அமைய உள்ளதாக கூறப்படுகிறது. இது நாதகவுக்கு சவாலான காலமாக இருப்பதால் நிர்வாகிகள் முழுவீச்சுடன் செயல்பட வேண்டும் என்று சீமான் கூறியுள்ளாராம்.

 

Edit by Prasanth.K