1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: திங்கள், 18 ஏப்ரல் 2016 (10:47 IST)

ரூ.1 கோடி மதிப்புள்ள கடல் குதிரை கடத்தல்: கூரியர் நிறுவனத்துக்கு சீல்

ரூபாய் 1 கோடி மதிப்புள்ள கடல் குதிரைகள் கடத்தல் தொடர்பாக புதுச்சேரியில் கூரியர் நிறுவனத்துக்கு வனத்துறையினர் சீல் வைத்தனர். மேலும் இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 

 
புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள், மது பாட்டில்கள் கடத்தப்படுவதை தடுப்பதற்காக புதுச்சேரி மாநில எல்லைப் பகுதியில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு வாகன சோதனை நடைபெற்று வருகிறது.
 
காலாப்பட்டு அடுத்த கனகசெட்டிக்குளத்தில் அதிகாரி நவுசர் தலைமையிலான கண்காணிப்பு குழுவினர் சோதனை மேற்கொண்டனர்.
 
அப்போது புதுச்சேரியில் இருந்து சென்னை நோக்கி சென்ற பார்சல் சர்வீஸ் நிறுவனத்துக்கு சொந்தமான மினி வேனை அதிகாரிகள் மடக்கி அதில் இருந்த அட்டை பெட்டிகளை சோதனையிட்டனர். அப்போது, அந்த அட்டை பெட்டிகளில் வெட்டி வைக்கப்பட்ட வெங்காயங்களில் படிகம் செய்யப்பட்ட ரூ.1 கோடி மதிப்புள்ள 659 கடல் குதிரைகள் இருந்தது தெரியவந்தது.
 
இதையடுத்து வேனையும், கடற்குதிரைகளையும் பறிமுதல் செய்த கண்காணிப்பு குழுவினர் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். இது தொடர்பாக வனத்துறையினர் வேன் ஓட்டுநர் கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் (53), வேனில் வந்த பார்சல் சர்வீஸ் நிறுனத்தின் மேலாளர் கோபி (32), ஊழியர் செந்தில்குமார் (34) ஆகிய மூவரையும் கைது செய்து விசாரணை நடத்தினர்.
 
விசாரணையில் புதுச்சேரி 100 அடி சாலையில் உள்ள வைகை பார்சல் சர்வீஸ் நிறுவனத்துக்கு சொந்தமான வேன் என்றும், அந்நிறுவனத்தில் இருந்து கடல் குதிரைகள் அடங்கிய பார்சல்கள் கொண்டு வந்ததும் தெரிந்தது.