1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 2 நவம்பர் 2021 (11:20 IST)

அதிமுக பொதுச்செயலாளர் என்ற பெயரில் சசிகலா தீபாவளி வாழ்த்து!

அதிமுக பொதுச்செயலாளர் என்ற பெயரை சசிகலா பயன்படுத்தக்கூடாது என அதிமுக தலைவர்கள் எச்சரிக்கை செய்து இருந்தும் அதிமுக பொதுச்செயலாளர் என்ற பெயரில் சசிகலா தீபாவளி வாழ்த்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சசிகலாவின் அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
 
இருள் விலகும் ஒளி பிறக்கும் தினமாகவும், தீமைகள் அகன்று நன்மைகள் பிரகாசிக்கும் தினமாகவும் கொண்டாடப்படுகின்ற இந்த நன்னாளில் அனைவருக்கும் என் இதயம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
 
பெரும் தொற்றான கொரோனா என்னும் கொடிய நோயை வென்று மனிதகுலம் மீண்டும் புத்துயிர் பெற்று கொண்டாடும் வகையில் இந்த தீபாவளித் திருநாளில் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் தடுப்பு ஊசியையும் தவறாமல் செலுத்தி கொண்டு கவனமாக சந்தோஷத்துடன் இந்த தீபாவளி திருநாளை கொண்டாட வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
 
நரகாசுரன் என்னும் கொடிய அரக்கனை மகாலட்சுமி துணையுடன் திருமால் அழித்த தினமே தீபாவளி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. இந்த திருநாளில் சூழ்ச்சிகளும் தீமைகளும் நம்மை விட்டு விலக நன்மையும் அன்பும் நாடிவர இன்பமாய் கொண்டாடுவோம்.
 
இந்த இனிய திருநாளில் நாடெங்கும் அமைதியும் அன்பும் தழைக்கட்டும், வேற்றுமையில் ஒற்றுமை ஓங்கட்டும், அனைவரது வாழ்விலும் வளமும் நலமும் பெருகட்டும் என்று இறைவனை வேண்டி அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை எனது இனிய தீபாவளி வாழ்த்துக்களை உரித்தாக்கிக் கொள்கிறேன் என சசிகலா அந்த அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளார்.
 
விகே சசிகலா கழக பொதுச்செயலாளர் அதிமுக என்று கையெழுத்திடப்பட்டு வெளியாகியுள்ள இந்த அறிக்கையால் அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.