திங்கள், 13 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: புதன், 14 ஜூன் 2017 (11:58 IST)

சரவணன் வீடியோ விவகாரம்: திமுகவின் கவன ஈர்ப்பு தீர்மானத்தை நிராகரித்த சபாநாயகர்!

சரவணன் வீடியோ விவகாரம்: திமுகவின் கவன ஈர்ப்பு தீர்மானத்தை நிராகரித்த சபாநாயகர்!

அதிமுக எம்எல்ஏக்கள் ஓபிஎஸ், சசிகலா அணிகளால் பேரம் பேசப்பட்டதாக மதுரை தெற்கு தொகுதி அதிமுக எம்எல்ஏ சரவணன் பேசிய வீடியோ சில தினங்களுக்கு முன்னர் வெளியாகி தமிழக அரசியலில் புயலை கிளப்பி வருகிறது.


 
 
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக சட்டமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என திமுக கவன ஈர்ப்பு தீர்மானம் ஒன்றை இன்று கூடிய சட்டசபையில் கொண்டு வந்தது. ஆனால் சபாநாயகர் தனபால் இதற்கு அனுமதி கொடுக்காமல் மறுத்துவிட்டார்.
 
சரவணன் வீடியோ தொடர்பாக ஏற்கனவே நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு வழக்கு நிலுவையில் உள்ளதால் இந்த விவகாரம் தொடர்பாக சட்டமன்றத்தில் விவாதிக்க முடியாது என சபாநாயகர் தனபால் திமுகவின் கவன ஈர்ப்பு தீர்மானத்தை நிராகரித்தார்.
 
ஆனால் திமுக உறுப்பினர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டசபையில் கூச்சலிட்டு அமளியில் ஈடுபட்டனர். காவிரி, முல்லைப்பெரியாறு போன்ற விவகாரங்களில் நீதிமன்றத்தில் வழக்கு இருந்தபோதும் சட்டமன்றத்தில் விவாதிக்கவில்லையா என அவர்கள் கேள்வி எழுப்பினர்.
 
திமுக எம்எல்ஏக்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் அனைவரையும் வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார். இதனையடுத்து ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்ட திமுகவினர் சாலை மறியலில் ஈடுப்பட்டனர். இன்றைய சட்டசபை கூட்டத்துக்கு எம்எல்ஏ சரவணனும் வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.