திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 1 ஜூன் 2018 (13:36 IST)

கைவிட்ட உச்ச நீதிமன்றம் ; எஸ்.வி.சேகர் விரைவில் கைது? - முடிவிற்கு வரும் கண்ணாமூச்சு நாடகம்

பெண் பத்திரிக்கையாளர்களை கொச்சைப்படுத்தும் வகையில் முகநூலில் பதிவு வெளியிட்ட விவகாரத்தில் நடிகர் எஸ்.வி.சேகருக்கு முன் ஜாமீன் வழங்க உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது.

 
எஸ்.வி.சேகர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் அவரை தமிழக போலீசார் இதுவரை கைது செய்யவில்லை.  மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்ட கூட்டத்தில் எஸ்.வி.சேகர் கலந்து கொண்ட போதிலும் அவரை போலீசார் கைது செய்யாமல் இருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
 
சென்னை உயர் நீதிமன்றத்தில் எஸ்.வி.சேகரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டு அவரை கைது செய்ய எந்த தடையும் இல்லை என்று நீதிமன்றம் அறிவித்தது. இருப்பினும் எஸ்.வி.சேகர் இன்று வரை கைது செய்யப்படவில்லை. எனவே தனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்று எஸ்.வி.சேகர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். 
 
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, எஸ்.வி.சேகருக்கு முன் ஜாமீன் வழங்க முடியாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.  மேலும், அவரை கைது செய்ய போலீசாருக்கு எந்த தடையும் இல்லை எனக் கூறிய நீதிபதிகள், உடனடியாக அவர் எழும்பூர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவு பிறப்பித்தனர்.
 
இந்த தீர்ப்பின் நகல் போலீசாருக்கு கிடைத்தால் அவர் கைது செய்யப்படுவதற்கு வாய்ப்பிருக்கிறது. அல்லது அதற்கு முன் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகவும் வாய்ப்பிருக்கிறது எனக் கூறப்படுகிறது.
 
எனவே, இந்த நாட்களாக ஆட்டம் காட்டிக்கொண்டிருந்த எஸ்.வி.சேகரின் கண்ணாமூச்சு நாடகம் விரைவில் முடிவிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.