1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வெள்ளி, 25 நவம்பர் 2016 (15:59 IST)

பொதுமக்கள் வங்கி கணக்கில் ரூ.25 ஆயிரம் - தீயாக பரந்த தகவல்

மத்திய அரசு சார்பில் அனைவரது வங்கிக் கணக்கிலும் ரூ.25 ஆயிரம் முன் பணம் செலுத்தி வருவதாக விருதுநகரில் வதந்தி கிளம்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.


 

பிரதமர் நரேந்திர மோடி கடந்த நவம்பர் 8ஆம் தேதி இரவு திடீரென ரூ.500, ரூ.1,000 நோட்டுக்கள் செல்லாது என அறிவித்தார். மேலும், நவம்பர் 24ஆம் தேதிக்குள் அதை வங்கிகளில் மாற்றிக் கொள்ள வேண்டும் எனவும் அறிவித்தார்.

அதற்கு மேற்பட்ட தேதிகளில் பொதுமக்கள் ரிசர்வ் வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம் அல்லது தங்களது வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்து கொள்ளலாம் என்று அறிவித்தது. இதன் காரணமாக கடந்த 16 நாட்களுக்கும் மேலாக வங்கிகளில் பொதுமக்கள் கூட்டம் அலை மோதியது.

இந்நிலையில், விருதுநகர் பகுதியில் கடந்த சில நாட்களாக, மத்திய அரசு சார்பில் அனைவரது வங்கிக் கணக்கிலும் ரூ.25 ஆயிரம் செலுத்தி வருவதாக விஷமிகள் சிலர் திட்டமிட்டு வதந்திகளை பரப்பி வருகின்றனர்.

அதாவது எரிவாயு இணைப்பு உள்ளவர்கள், சிலிண்டர் பயன்படுத்தும் தொலபேசி எண்ணிலிருந்து, ஒரு குறிப்பிட்ட எண்ணிற்கு தொடர்பு கொள்ள வேண்டும் என்றும். தொடர்ந்து பல மணி நேரம் முயற்சி செய்தால் மட்டுமே இந்த எண்ணிற்கான இணைப்பு கிடைக்கும் என்றும் முதலில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், எதிர் முனையில் எந்த கேள்வி மற்றும் பதில் இல்லாமலே ஒரு நிமிடத்திற்குள் இணைப்பு துண்டிக்கப்பட்டு விடுகிறது. அதன் பிறகு, சம்பந்தப்பட்ட நபர்களுக்கு ஒரு குறுஞ்செய்தி வருகிறது. அதில், ’அழைப்புக்கு நன்றி, உங்களது கணக்கு 24 மணி நேரத்திற்குள் செயல்பட தொடங்கும்’ என ஆங்கிலத்தில் குறிப்பிடப்படுகிறதாம்.

இதை உண்மை என நம்பிய எரிவாயு பதிவுதாரர்கள் பலர், தங்களது செல்போனில் சார்ஜ் காலியாகும் வரை அந்த எண்ணை தொடர்பு கொண்டு வருகின்றனர். மேலும் பலர், இரவு பகலாக கண் விழித்து அந்த எண்ணை தொடர்பு கொண்டு வருகின்றனராம்.