வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு.! வெள்ளை அறிக்கை வெளியிடுக.! அரசுக்கு ஜி.கே.மணி வலியுறுத்தல்..!
வன்னியர்களுக்கான இடஒதுக்கீட்டு புள்ளி விவரங்களை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டுமென்று தமிழக அரசுக்கு சட்டப்பேரவை ஜி.கே.மணி வலியுறுத்தியுள்ளார்.
சட்டப்பேரவையில் இருந்து இன்று வெளிநடப்பு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவதற்கு மாநில அரசுக்கு அதிகாரமில்லை என்ற தகவலை முதல்வரும், சட்டத்துறை அமைச்சரும் பேசியிருப்பது உண்மைக்கு மாறான தகவலாகும் என்று தெரிவித்தார்.
இது தொடர்பாக சட்டப்பேரவையில் முதல்வர், அமைச்சர்கள் பேசியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்றும் இதை அவையின் உரிமையை மீறிய செயலாகவே நாங்கள் கருதுகிறோம் என்றும் ஜிகே மணி கூறினார். வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க சாத்தியமில்லை என்ற பொருளில், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் தான் முடியும் என்றும் அதற்கு அதிகாரமில்லை என்றும் அமைச்சர்கள் சிவசங்கர், ரகுபதி பேசியதை அவர் சுட்டிக் காட்டினார்.
2008 புள்ளிவிவர சட்டத்தின் அடிப்படையில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது என்று ஜி கே மணி தெரிவித்தார். அந்த அடிப்படையில் தான் தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்துகிறோம் என்றும் அதற்கும் அதிகாரம் இல்லை என அவையில் மறுக்கின்றனர் என்றும் அவர் கூறினார்
மேலும் அமைச்சர் சிவசங்கர் ஒரு 3-ம் தர பேச்சாளரைப் போல சந்தையில், முச்சந்தியின் நின்று கொண்டு பேசுவது போல பேசுகிறார். பல மாநாடுகள், போராட்டங்கள் மூலமாக இட ஒதுக்கீடு பெற்றுக் கொடுத்த பாமக நிறுவனர் ராமதாஸ் குறித்து அவதூறாக கொச்சைப்படுத்திப் பேசுகிறார் என்று ஜி.கே மணி கூறினார்.
மேலும் 10.5 மேல் இட ஒதுக்கீடு வன்னியர்களுக்கு வழங்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார் என்றும் குரூப் 1-ல் உள்ள முக்கிய உயர் பதவிகளில் 10.5 க்கு மேல் இடஒதுக்கீடு வன்னியர்களுக்கு வழங்கப்பட்டு இருப்பதை நிரூபித்தால், நான் இன்றே சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்கிறேன் என்றும் அரசியல் பொதுவாழ்வில் இருந்தும் விலகிக் கொள்கிறேன் என்றும் தெரிவித்தார்.
அமைச்சர்கள் அப்படி நிரூபிக்கவில்லை என்றால் பதவி விலகுவார்களா? என கேள்வி எழுப்பிய ஜிகே மணி, வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு தொடர்பான புள்ளி விவரத்தை தமிழக அரசு வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.