1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 25 ஜனவரி 2020 (13:34 IST)

சசிகலா சீக்கிரமா வெளிய வரணும்! – பிரார்த்தனை செய்யும் ராஜேந்திர பாலாஜி!

சசிகலா சீக்கிரம் சிறையிலிருந்து வெளிவர வேண்டுமென வேண்டி வருவதாய் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்த பிறகு ஊழல் வழக்கில் சசிகலா சிறை சென்றார். அதற்கு சென்ற பிறகு அதிமுக அமைச்சர்கள் அனைவரும் ஈபிஎஸ் – ஓபிஎஸ் தலைமையில் இரு அணியாக பிரிந்தனர். பிறகு இருவரும் இணைந்து அதிமுகவை ஒரு அணியாக மாற்றினர். அதிமுகவிலிருந்து டிடிவி தினகரன் பிரிந்து சென்று அமமுகவை உருவாக்கினாலும் தங்களுக்கு அதிமுகவில் ஆள் இருப்பதாக அடிக்கடி சொல்லி வருகிறார்.

இந்நிலையில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அடிக்கடி சசிக்கலாவுக்கு ஆதரவாக பேசி வருகிறார். சமீபத்தில் பேட்டியளித்துள்ள அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ”சசிக்கலா சிறையில் இருப்பது எனக்கு வருத்தமளிக்கிறது. அவர் விரைவில் வெளியே வர வேண்டும் என்பதே எனது பிரார்த்தனை. அவர் விடுதலையானால் எனக்கு மகிழ்ச்சி” என்று கூறியுள்ளார்.

அதிமுக அமைச்சர் ஒருவரே இவ்வாறு பேசியிருக்கிறாரே என அதிமுக தரப்பில் கேட்டால் அது அவரது தனிப்பட்ட கருத்து என்று கூறி விடுகிறார்களாம். சசிகலாவை மீண்டும் அதிமுகவில் இணைத்து கொள்வீர்களா என்று கேட்டால் கூட கழக தலைமை ஆலோசித்து முடிவெடுக்கும் என்றே பதில் வருவதாக அரசியல் வட்டாரத்தில் பேசிக் கொள்ளப்படுகிறது.