திங்கள், 18 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: வியாழன், 1 செப்டம்பர் 2016 (08:06 IST)

ராம்குமார் விவகாரம்: ஆர்.டி.ஐ. கேள்விகளுக்கு பதில் அளிக்க போலீஸ் மறுப்பு!

ராம்குமார் விவகாரம்: ஆர்.டி.ஐ. கேள்விகளுக்கு பதில் அளிக்க போலீஸ் மறுப்பு!

சென்னை, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இளம்பெண் சுவாதி வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட வழக்கில் ராம்குமார் என்ற இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளான். இந்த கைது நடவடிக்கையின் போது நடந்தவை குறித்து விளக்கம் கேட்டு அனுப்பப்பட்ட ஆர்.டி.ஐ. மனு ஒன்றுக்கு காவல்துறை பதில் அளிக்க மறுத்துவிட்டது.


 
 
சுவாதி கொலை வழக்கில் ராம்குமார் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் காவல்துறை மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து ஆர்.டி.ஐ. மூலம் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த வழக்கறிஞர் பிரம்மா, கடந்த ஜூலை 8-ஆம் தேதி பத்து கேள்விகள் கொண்ட மனுவை நெல்லை மாவட்ட எஸ்.பி. அலுவலகத்துக்கு அனுப்பினார்.
 
அவரின் கேள்விகளுக்கு நேற்று பதில் அளித்த தென்காசி போலீஸ் இன்ஸ்பெக்டர், இந்த வழக்கு புலன் விசாரணையில் உள்ளதாலும், தங்கள் கேள்விக்கு தரப்படும் பதில்கள் காவல்துறை விசாரணைக்கும், குற்ற வழக்கு தொடர்வதற்கும் ஊறுவிளைவிக்கும் என்பதாலும் ஆர்.டி.ஐ பிரிவு 8 (ஐ) எச் 2005-இன் படி தங்கள் கேள்விக்கு பதில் தர சட்டத்தில் விலக்கு அளிக்கப்பட்டு இருக்கிறது என்பதால் பதில் தர இயலாது என கூறியுள்ளார்.
 
காவல்துறையின் பதிலில் திருப்தியடையாத வழக்கறிஞர் பிரம்மா கூறுகையில், ராம்குமார் வழக்கில் ஆர்.டி.ஐ.யில் தகவல் தர மறுத்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. தகவல் கொடுப்பதால் வழக்கில் எந்தவித மாற்றமும் ஏற்படாது. தகவல் என்பது எழுத்து வடிவில் உள்ளது. அதை யாராலும் மாற்ற இயலாது.
 
வழக்கின் போக்கை பற்றி கேட்கவில்லை. நடந்து முடிந்த நிகழ்வுகளைப் பற்றிதான் தகவல் கேட்டுள்ளேன். காவல்துறை விவரம் தர மறுத்துள்ளதால் மேல்முறையீடு செய்துள்ளேன் என்றார்.