பாலியல் பலாத்காரம் செய்த காவல் ஆய்வாளர்; கைது செய்யக்கோரி பெண் உண்ணாவிரதம்

லெனின் அகத்தியநாடன்| Last Updated: செவ்வாய், 28 ஏப்ரல் 2015 (13:54 IST)
தன்னை பாலியல் பலாத்காரம் செய்த காவல்துறை ஆய்வாளரை கைது செய்யக்கோரி திருச்சி அரசு மருத்துவமனையில் பெண் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

திருச்சியில் காவல்துறை ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் முருகேசன். இவருக்கும், திருச்சி கே.கே.நகர். பகுதியைச் சேர்ந்தவர் பரிமளா (35) என்பவருக்கும் கடந்த 2011ஆம் ஆண்டு முதல் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பரிமளா குடும்பப் பிரச்சனை காரணமாக தனது கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்படவே காவல் ஆய்வாளர் முருகேசன், தனது மனைவியை விட்டு பிரிந்து பரிமளாவுடன் வசித்து வந்துள்ளார். அதன் பிறகு லஞ்ச வழக்கில் முருகேசன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
சில மாதங்கள் கழித்து முருகேசன் பரிமளாவை விட்டுவிட்டு மீண்டும் மனைவியுடன் சேர்ந்து வசித்து வந்துள்ளார். பின்னர் முருகேசன் திருச்சியில் இருந்து நெல்லை மாவட்டம் சுரண்டை காவல் நிலையத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

இந்நிலையில் கடந்த 25ஆம் தேதி திருச்சிக்கு வந்த முருகேசன் தனது வீட்டிற்கே வந்து தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக பரிமளா புகார் அளித்தார். அதன் பேரில் திருச்சி கண்டோன்மெண்ட் மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் ஷீலா வழக்கு பதிவு செய்துள்ளார்.
மேலும், அவர் திருச்சி அரசு மருத்துவமனையின் முன்பு உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகிறார். இது குறித்து அவர் கூறுகையில், ”இன்ஸ்பெக்டர் முருகேசன் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், சாகும்வரை உண்ணாவிரதம் போராட்டத்தை தொடருவேன். மேலும், மருத்துவமனையில் இருந்து வெளியேறி திருச்சி போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு சென்று உண்ணாவிரதம் இருப்பேன்” என்றார்.இதில் மேலும் படிக்கவும் :